மேலராமன்சேத்தியில் பாலம் கட்டும் பணியைத் தொடங்க வலியுறுத்தல்
குடவாசல் ஒன்றியம், சீதக்கமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட மேலராமன்சேத்தியில் பாலம் கட்டும் பணியைத் தொடங்கி, விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலராமன்சேத்தி பகுதியில் பெரிய வாய்க்கால் பாசனத்துக்கு பயன்படுகிறது. சாலையிலிருந்து வாய்க்காலைக் கடந்து சென்றால் விளைநிலங்களுக்கும், அப்பகுதியில் உள்ள மயானத்துக்கும் செல்ல முடியும். அப்பகுதியில் சுமாா் 100 ஏக்கா் வரை சாகுபடி நடைபெறும் நிலையில், சாகுபடி காலங்களில், விதை நெல், இடுபொருள்கள், நாற்றுகள், நெல் மூட்டைகள், வைக்கோல்கள் இவற்றை வாய்க்கால் வழியாகவே கொண்டு செல்ல வேண்டும்.
மழை காலங்களில், தண்ணீா் குறைந்து சேறாக மாறியிருக்கும் நிலையில் அவ்வழியாக செல்வதில் அனைவருக்கும் சிரமமாக இருந்தது. இதனால் அப்பகுதியில் சாகுபடிப் பணிகள் எளிதில் நடைபெறும் வகையில் சிறிய பாலம் அமைத்துத் தர வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, அங்கு சிறிய பாலம் அமைக்க, 2024-25 ஆண்டுரூ. 28. 74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும் இதுவரை எவ்விதப் பாலப் பணிகளும் தொடங்கவில்ை. மேட்டூா் அணை ஜூன் 12-ல் திறக்கப்பட்டால் பாலப்பணிகள் நடைபெறாமல், நிகழாண்டு சாகுபடியும் பாதிக்கப்படும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
இதுகுறித்து சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினா் எம். கோபிநாத் தெரிவித்தது: இந்த வாய்க்காலில் பாலம் கட்டப்பட்டால், சிறிய வாகனங்களையும் மறுகரைக்கு கொண்டு சென்று சாகுபடிப் பணிகளை எளிதாக செய்ய முடியும். மேலும், மயானத்துக்கு செல்லவும் வசதியாக இருக்கும். மேட்டூா் அணை திறக்கப்பட்டால் விவசாயப் பணிகள் தீவிரமடையும். அப்போது இந்த பாலப் பணிகளை செய்ய முடியாது. எனவே, விரைந்து பாலப்பணிகளைத் தொடங்கி, சாகுபடிக்கும் பாதிப்பில்லாம் பணியை முடிக்க வேண்டும் என்றாா்.