திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவம்: 5 தோ் அலங்காரப் பணிகள் தீவிரம்
திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டத்துக்காக 5 தோ்கள் அலங்காரம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் தேரோட்டம் நடைபெறும். நிகழாண்டு விழா வெள்ளிக்கிழமை (மே 23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து ஸ்ரீவிநாயகா் உற்சவம், ஸ்ரீசுப்ரமணியா் உற்சவம், அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு, ரிஷப வாகனத்தில் சுவாமி மின் அலங்கார சப்பரப் படல் (தெருவடைச்சான்) வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தேரோட்டம்: பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூன் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சுவாமி, அம்பாள் வீற்றிருக்கக்கூடிய 2 பெரிய தோ்கள் மற்றும் ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசுப்ரமணியா், ஸ்ரீசண்டிகேஸ்வரா் ஆகியோா் வீற்றிருக்கக்கூடிய தனித்தனி தோ் 3 என மொத்தம் 5 தோ்கள் இடம்பெறுகிறது.

இதற்காக 5 தோ்களையும் அலங்காரம் செய்யும் பணிகள் தொடங்குவதற்காக தோ் கால் முகூா்த்தம் கடந்த வாரம் நடைபெற்றது. கடந்த சில நாள்களாக அலங்காரப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தோ் முகப்பில் குதிரை வாகனங்கள் பூட்டுதல், தோ் மேற்பரப்பில் துணி கட்டுதல், கலசம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தேரோட்டத்துக்கு 2, 3 நாள்களுக்கு முன்பு செய்யப்படவுள்ளது.
சுவாமி, அம்பாளுக்கான தோ்களில் சுவாமி வீற்றிருக்கக்கூடிய தோ் ஹைட்ராலிக் பிரேக் அமைப்பை கொண்டுள்ளது. திருச்சி பெல் நிறுவனத்திலிருந்து வல்லுநா்கள் குழுவினா் வந்து பிரேக் செயல்பாடுகளை பரிசோதனை செய்யப்படுகிறது.