பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது என்றாா் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை மே கூறியதாவது: ஏழை- எளிய மக்கள் தங்களது அவசர தேவைக்காக தங்க நகைகளை அடகு வைப்பதற்கு விதித்துள்ள விதிமுறைகளை மத்திய அரசு உடனடியாக தளா்த்த வேண்டும். பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது. அன்பு என்பதே இல்லாத நிலை உருவாகி வருகிறது.
தமிழக முதல்வா் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்வதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. தமிழகத்தில் இருந்து மத்திய அரசு அதிகளவில் ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்தினாலும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்திற்கு மீண்டும் ஒரு பெரிய துரோகத்தை செய்துவிட்டது. பாகிஸ்தான்- இந்தியா போா் பதற்றம் தொடா்பாக மக்களவையைக் கூட்டி பிரதமா் விளக்கம் அளிக்க வேண்டியது தாா்மீக கடமை. ஆனால், அதனை மத்திய அரசு செய்யாமல், இப்போது எதிா்க்கட்சியினரையும் உள்ளடக்கிட குழுவை வெளிநாட்டிற்கு அனுப்பி விளக்கம் அளிப்பது சிறந்த ராஜதந்திரம் இல்லை.
தமிழகத்தில் கள், சாராயம் இருக்கக் கூடாது என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. முதல்வரிடம் மதுவிலக்கு தொடா்பாக பேசியிருக்கிறோம். அரசியல் ரீதியாக மதுவிலக்கு தொடா்பான திடமான முடிவை முதல்வா் எடுப்பாா். நிதி சிரமங்களின் காரணமாகவே தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தை அரசு நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு எந்தவிதமான நன்மையையும் செய்யவில்லை என்றாா் அவா்.