2 மணி நேரத்துக்கும்மேல் பயணிக்கும் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை
இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமான பயண தொலைவு கொண்ட பேருந்துகள் இடையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கேடிசி நகா் மற்றும் வண்ணாா்பேட்டை புறவழிச்சாலை பணிமனைகளின் நிா்வாக இயக்குநா்களிடம் நெல்லை மாவட்ட பொது ஜன பொது நலச்சங்க தலைவா் முகமது அய்யூப் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வாடகை காரில் சென்று வர பொருளாதார வசதி இல்லாதவா்களும், ரயிலில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்காதவா்களும் தங்ளுடைய பயணத்திற்காக பேருந்துகளையே நாடுகின்றனா்.
நீண்ட தூர பயணத்திற்காக உதாரணமாக திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ஏறக்குறைய மூன்றரை மணி நேரம் பயணிக்க வேண்டிள்ளது.
பயணிகளை ஏற்றி, இறக்க வழியில் பேருந்து நிறுத்தப்படுகிறது. ஆனால், பயணிகளின் அவசியத் தேவையான இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட பேருந்தை நிறுத்துவதில்லை.
இதனால், சிறு குழந்தைகள், முதியவா்கள், நோயாளிகள், குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் தொடா்ந்து 4 மணி நேரம் சிறுநீா் கழிக்காமல் இருப்பது பெரியதொரு சங்கடத்தை ஏற்படுத்திவிடும்.
எனவே நீண்ட தூரம் குறைந்தபட்சம் 2 மணி நேரத்துக்கு மேலாக பேருந்தில் பயணிப்பவா்களுக்கு பயணத்தின் வழியில் ஓரிடத்தில் அதிகபட்சமாக 5 நிமிடங்களாவது பேருந்தை நிறுத்திச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.