Shreyas Iyer: புறக்கணிப்பின் வலி... வெற்றி - `ஸ்ரேயஸ்’ எனும் கேப்டன்!
கடந்த மார்ச் 25 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டி அது. சுயநலமாகத் தன்னுடைய சதத்தைப் பற்றி யோசிக்காமல் அந்தப் போட்டியில் அணிக்காக விளையாடிய கேப்டன் ஒருவரின் செயல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. 19 வது ஓவரின் முடிவில் அந்த கேப்டன் 97 ரன்களில் இருக்கிறார். கடைசி ஓவரில் எப்படியும் சதமடித்துவிடுவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ரசிகர்களும் ஆரவாரமாக Standing Ovation கொடுக்க தயாராகிக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்த அத்தனைப் பேரின் முகத்திலும் சதத்தை நோக்கிய ஆர்வமும் எதிர்பார்ப்பும் மின்னிக் கொண்டிருந்தன. ஆனால், அந்த ஓவரில் ஸ்ட்ரைக்கில் இருந்த சஷாங்க் சிங் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். சரி, முதல் இரண்டு, மூன்று பந்துகளை ஆடிவிட்டு அவர் ஸ்ட்ரைக் கொடுப்பார். கேப்டன் சதமடிப்பார் என்பதுதான் அனைவரின் நம்பிக்கையும். ஆனால் ஓவரின் கடைசிக்கு முந்தையப் பந்து வரை அந்த கேப்டனுக்கு ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை. அத்தனை பேரின் முகமும் மாறுகிறது. சதத்தை நிறைவு செய்ய வேண்டிய கேப்டனுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காத சஷாங்க் சிங்கின் மேல் பல பேருக்கும் அதிருப்தியே இருந்திருக்கும்.
இன்னிங்ஸ் ப்ரேக்கில் சஷாங்க் சிங்கின் பேட்டி. எல்லாருடைய மனதிலும் இருந்த அந்த கேள்வியை வர்ணனையாளர் கேட்டுவிட்டார். 'நீங்கள் ஏன் கேப்டனுக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை..?' சஷாங்க் அதற்கு சொன்ன பதில்தான் அந்த கேப்டனை ஒரு தலைவனாகப் பார்க்கத் தூண்டியது. "என்னுடைய சதத்தைப் பற்றி யோசிக்காமல், பந்தைப் பார்த்து உன்னுடைய ஆட்டத்தை ஆடு" என்று அவர் சஷாங்கிடம் சொல்லியிருக்கிறார்.
தன்னுடைய சதம் கூட முக்கியமில்லை. சதத்துக்காக பவுண்டரி வாய்ப்புள்ள ஒரு பந்தை சிங்கிள் ஆக்குவதா என்று யோசித்த அந்த உன்னதக் கேப்டன் வேறு யாரும் இல்லை ஸ்ரேயஸ் ஐயர்தான்.

18 வருடங்களாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் எத்தனையோ தலைச்சிறந்த கேப்டன்களைப் பார்த்திருக்கிறோம். அந்தப் பட்டியலில் தற்போது ஸ்ரேயஸ் ஐயரும் இணைந்திருக்கிறார். இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டு வரும் ஸ்ரேயஸ் ஐயர் இதற்கு முன் டெல்லி அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் கேப்டனாகச் செயல்பட்டிருக்கிறார்.

2020-ல் டெல்லி அணிக்கு அவர் கேப்டனாக இருந்த சமயத்தில்தான் அந்த அணி முதல் முறையாக ஐபிஎல்லின் இறுதிபோட்டிக்கு முன்னேறி இருந்தது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே டெல்லி அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் ஸ்ரேயஸ் ஐயரின் கேப்டன்சிக்கும் பெரிய பங்குண்டு.
டெல்லிக்குப் பிறகு கொல்கத்தா அணிக்கு கேப்டனாக செயல்பாட்டார். கடந்த சீசனில் அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார்.
இதற்கு முன் கொல்கத்தா அணி கவுதம் கம்பீர் தலைமையில் மட்டும் இரண்டு கோப்பைகளை வென்றிருந்தது. அதற்கு அடுத்து கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயஸ் பெற்றார். ஆனால் கோப்பையை வென்றுக்கொடுத்த அவரை இந்த சீசனில் கொல்கத்தா அணி தக்கவைத்து கொள்ளவும் இல்லை. ஏலத்தில் எடுக்கவும் இல்லை.
ஒரு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டனுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் கொடுக்கவில்லை என்கிற கோபம் ஸ்ரேயஸூக்கு உண்டு.

இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அணி 26.75 கோடி கொடுத்து ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்தில் எடுத்தது. இது மிகப்பெரிய தொகை. இவ்வளவுத் தொகைக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ற ரிசல்ட்டை கொடுக்க வேண்டும் என்கிற அழுத்தம் அவர் மீது இருந்தது. பஞ்சாப் அணிக்கு கேப்டனாக்ச் இருப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அந்த அணிக்கு பொறுமையே இருக்காது.
சீசனுக்கு சீசன் அணியில் மாற்றங்களை செய்து கொண்டே இருப்பார்கள். வீரர்களை கலைத்துப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். இது 18 வது சீசன் அல்லவா? இதுவரை அந்த அணி எத்தனைக் கேப்டன்களை பயன்படுத்தியிருக்கிறது என அறிந்தால் அதிர்ச்சியாக இருக்கும். ஸ்ரேயஸ் ஐயர் அந்த அணியின் 17 வது கேப்டன் எனில், அந்த அணியின் நிலையை யோசித்துப் பாருங்கள்.
ஸ்ரேயஸின் முன் பெரிய சவாலே காத்திருந்தது. ஆனால், ஸ்ரேயஸ் முதல் போட்டியிலிருந்தே இந்த அணியை எந்த வழியில் நடத்தி செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.

அதற்கான உதாரணம்தான் மேலே குறிப்பிட்டிருந்த அந்த சம்பவம். இப்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. கடைசியாக 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை பிளே ஆஃப் சுற்றுவரை அழைத்துச்சென்ற முதல் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் வரலாறு படைத்து ஜொலிக்கிறார்.
ஒரு போட்டியில் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனப்போது கூட பவுண்டரி லைனில் நின்றபடியே கேப்டன்சி செய்தார். அதுமட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். சீசனின் தொடக்கத்தில் மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் மாதிரியான ஆஸ்திரேலிய ஸ்டார் வீரர்கள் இருக்க, அவர்களை விட இந்திய வீரர்களுக்குதான் முக்கியத்துவத்தை கொடுத்தார். பிரியான்ஸ் ஆர்யாவையும் பிரப்சிம்ரன் சிங்கையும் ஓப்பனிங் இறக்கினார். இருவருமே Uncapped வீரர்கள்.

ஆனாலும் அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்தார். அதேமாதிரி, நேஹல் வதேராவை நம்பர் 4-5 இல் இறக்கி நின்று செட்டில் ஆகி பெரிய இன்னிங்ஸ்களை ஆட வைத்தார். கடைசியாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது டாப் ஆர்டர் சொதப்பியபட்சத்திலும் மிடிலில் நேஹல் வதேரா நின்று நன்றாக ஆடி அணியை காப்பாற்றினார். அதேமாதிரி, லோயர் மிடில் ஆர்டரில் போட்டியை முடித்துக் கொடுக்க சஷாங் சிங்கை வைத்திருக்கிறார். இப்படி ஸ்ரேயஸின் தளபதிகள் எல்லாருமே இந்திய வீரர்கள்தான். ஐபிஎலில் தோனி, ரோஹித்திற்கு பின் ஸ்ரேயஸ் ஒரு தலைச்சிறந்த கேப்டனாக உருவெடுத்து வருகிறார் என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.
ஐ.பி.எல் இல் மிளிரும் ஸ்ரேயஸ் இந்திய அணிக்காகவும் தனது சிறப்பான பங்களிப்புகளை அளித்தே வருகிறார். மும்பையில் பிறந்த இவர் 2017-ஆம் ஆண்டு நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அதே ஆண்டு டிசம்பரில் இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 2021- ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

அதேபோல 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீரராக விளங்கிய இவர் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 70 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இப்படி தொடர்ந்து இந்திய அணியில் அசத்திய ஸ்ரேயஸை ஒரு கட்டத்தில் இந்திய அணியின் கேப்டனுக்கான வாய்ப்பாகவும் பார்த்தார்கள். கேப்டன்சிக்கான ரேஸில் அவரும் இருந்தார். ஆனால் அவருக்கும் பிசிசிஐ- க்கும் இடையே ஏற்பட்ட ஒரு விரிசல் அந்த வாய்ப்பைத் தட்டிப் பறித்தது. காரணம் உள்ளூர் போட்டிகளில் ஸ்ரேயஸ் விளையாட மறுத்ததால் பிசிசிஐ அவரை வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கியது.
கடந்த இரண்டு ஆண்டுகள் அவரது கிரிக்கெட் பயணம் சவால்கள் நிறைந்த ஒன்றாகத்தான் இருந்தது. இந்நிலையில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிய ஸ்ரேயஸ் எல்லாவிதமான உள்ளூர் போட்டிகளிலும் கலந்துகொண்டு விளையாட ஆரம்பித்தார். அதன்பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் வாய்ப்பு ஸ்ரேயஸ் ஐயருக்கு கொடுக்கப்பட்டது. இந்திய அணி, சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த அந்தத் தொடரில் அவர் 243 ரன்களை அடித்திருந்தார்.

இந்தியா சார்பில் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்களை எடுத்த வீரராக ஸ்ரேயாஸ் ஐயரே இருந்தார். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அவருக்கு மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதைக் கொடுத்தது. மேலும் பிசிசிஐ வெளியிட்ட 2025–26ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் மீண்டும் இடம் பிடித்திருக்கிறார்.
இலக்கை நோக்கி ஓடும் ஸ்ரேயஸ் ஐயர் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட் வரை தொடர்ந்து தன்னை மேம்படுத்தி, இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். ஒரு சிறந்த வீரராக கம்பேக் கொடுத்துவிட்டார். சீக்கிரமே அந்த கேப்டன்சிக்கான ரேஸிலும் புகுந்து ஆச்சர்யப்படுத்துவார் என்றே தோன்றுகிறது.
ஐபிஎல் தொடரில் கேப்டனாக திறம்பட செயல்படும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாழ்த்துகள்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...