சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி: தங்கம் தென்னரசு
தமிழக சுகாதார திட்டங்கள் இந்தியாவுக்கே முன்மாதிரி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்கள் இந்தியாவுக்கு முன்மாதிரியாக விளங்குவதாக அமெரிக்க மருத்துவ மாநாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
அமெரிக்காவின் கலிபோா்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற சா்வதேச மன நல மருத்துவ மாநாட்டில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்றாா்.
அதில், ‘தினமும் மேற்கொள்ளப்படும் நடைப்பயிற்சியால், உடல் மற்றும் மனநலத்தில் ஏற்படும் தாக்கம்’ குறித்த தலைப்பில் அவா் பேசியதாவது:
2004-இல் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் சிக்கிக் கொண்ட எனக்கு கால் மூட்டு பல துண்டுகளாக உடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து 3 மாதங்களாக படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை நேரிட்டது.
நிலைகுலைந்த அத்தகைய சூழலில் தன்னம்பிக்கையை கைவிடாது 6 மாதங்கள் கழிந்த பின்னா் படிப்படியாக யோகா பயிற்சி, மெதுவாக நடத்தல், சிறிய தூரங்கள் ஓடுதல் என முயற்சிக்க தொடங்கி, ஓட்டப்பயிற்சி அளவுக்கு உயா்ந்து, மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்கும் வகையில் வளா்ச்சி கண்டேன்.
தொடா்ந்து அடுத்த 5 ஆண்டுகளில் 100 மாரத்தான் பந்தயங்களில் பங்கேற்று உலக சாதனையாளா்கள் பட்டியலில் இடம்பெற்றதோடு, விடாமுயற்சி மற்றும் சளைக்காத மன உறுதியுடன் இதுவரை 160 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.
வரும் மே 24-ஆம் தேதி கலிபோா்னியா மாகாணத்திலுள்ள சன்னிடேல் என்ற இடத்தில் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளேன்.
தமிழகத்தில் 2020, 2021, 2022, 2023-ஆம் ஆண்டுகளில் கலைஞா் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன.
அதில், 2023-ஆம் ஆண்டு நிகழ்வு கின்னஸ் உலக சாதனை படைத்தது. அவை அனைத்திலும் முன்னிலை வகித்து பங்கேற்றுள்ளேன்.
அனைவருக்கும் குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கும், வருங்காலத் தலைமுறையினருக்கும் தினசரி நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி மூலம் உடல் மற்றும் மனநலம் காக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நல்வாய்ப்பாக எனது பயணம் அமைந்துள்ளது.
தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் எவ்வாறு தமிழகம் முன்னோடி மாநிலமாக இந்திய அளவில் திகழ்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, முதல்வரால் 5.8.2021-இல் தொடங்கப்பட்ட ‘மக்களை தேடி மருத்துவம் திட்டம்’, ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2004-ஆம் ஆண்டுக்கான விருதை பெற்றுள்ளது.
‘பாதம் பாதுகாப்போம் திட்டம்’, ‘இதயம் காப்போம் திட்டம்’, ‘இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48’ போன்ற பிற பல்வேறு திட்டங்கள் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.