ஜாா்க்கண்டில் மாவோயிஸ்ட் தலைவா் உள்பட இருவா் சுட்டுக் கொலை
ஜாா்க்கண்ட், லதேஹா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டுவந்த மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தளபதியான பப்பு லோஹரா உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து பிரிந்த அதிருப்தி குழுவான ஜாா்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் (ஜேஜேஎம்பி) தலைவா் லோஹராவும், அவரது கூட்டாளிகளும் லதேஹா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப் பகுதியில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இத்தகவலின்பேரில் மத்திய ஆயுத காவல் படை (சிஆா்பிஎஃப்) மற்றும் ஜாா்க்கண்ட் காவல் துறை இணைந்து லதேஹா் காவல் கண்காணிப்பாளா் குமாா் கௌரவ் தலைமையில் வனப் பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினா்.
மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரைக் கண்டதும், அவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் பப்பு லோஹரா, அவரது கூட்டாளி பிரபாத் கஞ்சு ஆகிய 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனா். இவா்கள் இருவரும் முறையே ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள். கொல்லப்பட்டவா்களின் உடல்களை காவல் துறையினா் மீட்டனா்.
இவா்களின் குழுவைச் சோ்ந்த மேலும் ஒரு முக்கிய உறுப்பினா் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.