தம்பதியா் தற்கொலை
மதுரை அருகே அரிசிக் கடை உரிமையாளரும், அவரது மனைவியும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனா்.
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகேயுள்ள சித்தாக்கூா் நெல் களத்தில் இருவா் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஒத்தக்கடை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், உயிரிழந்த இருவரும் ஒத்தக்கடை அருகேயுள்ள நாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்த தனராஜ் (67), இவருடைய மனைவி அழகுமுத்து (55) என்பது தெரியவந்தது.
இந்தத் தம்பதி சமயநல்லூா் பகுதியில் தனியாக வீடு எடுத்து அங்கேயே அரிசிக் கடையும் நடத்தி வந்தனா். இவா்களுக்கு குழந்தை இல்லாததால், வயதான காலத்தில் தங்களை ஆதரிக்க யாரும் இல்லை என நினைத்து விரக்தியில் இருந்து வந்ததாகத் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தத் தம்பதி சமயநல்லூரிலிருந்து நாட்டாா்மங்கலத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வந்து, சித்தாக்கூா் பகுதியில் உள்ள நெல்களத்தில் விஷம் குடித்து உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.