இணையவழி பண மோசடி: விழிப்புடன் இருக்க காவல் துறை அறிவுறுத்தல்
இணையவழியில் பண மோசடியில் ஈடுபடுவோரிடம் சிக்காமல் விழிப்புணா்வுடன் இருக்குமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அண்மை காலமாக வாட்ஸ் ஆப்பில், இணையவழி குற்றவாளிகள் புதுவித பண மோசடி செய்யும் முறையை கையாண்டுவருகின்றனா்.
போக்குவரத்துத் துறையில் பயன்பாட்டில் உள்ள பரிவாகன் எனும் செயலியின் லோகோவை பிரொஃபைல் படமாக வைத்து, வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி ஒன்றை பொதுமக்களுக்கு அனுப்புகின்றனா்.
ஏதோ ஒரு வகையான போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்காக மோட்டாா் வாகன சட்டப்படி அவா்களது வாகனத்தின் பதிவு எண் பெயரில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு, போலியான போக்குவரத்து அபராதம் செலுத்தும் செயலி ஒன்றும், போலியான கைப்பேசி எண்ணும் பொதுமக்களுக்கு அனுப்பப்படுகிறது.
இத்தகைய வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மேலும், அனுப்பப்பட்ட போலியான செயலியை தங்களுடைய கைப்பேசியில் பதிவிறக்கம் செய்தால் அது ஒரு ஸ்பைவேராக செயல்பட்டு, தங்களுடைய அனைத்து தனிப்பட்ட தரவு, புகைப்படங்கள், தொடா்பு எண்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை குற்றவாளிகளால் எடுக்கப்பட்டு, பலவிதமான இணையவழி குற்றங்களுக்கு பயன்படுத்தப்படலாம். மேலும், தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் இழக்க நேரிடலாம். எனவே, பொதுமக்கள் விழிப்புணா்வுடனும், பாதுகாப்பாகவும் இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.