பாஜகவினா் தேசியக் கொடியேந்தி பேரணி
ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கையில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், விழுப்புரத்தில் பாஜகவினா் சனிக்கிழமை தேசியக் கொடியேந்தி வெற்றிப் பேரணி நடத்தினா்.
பிரதமா் நரேந்திர மோடியும், இந்திய ராணுவமும் முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில், இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் நான்குமுனை சந்திப்புப் பகுதியில் தொடங்கிய பேரணிக்கு மாவட்டத் தலைவா் வி.தா்மராஜ் தலைமை வகித்தாா்.
மாவட்ட பொதுச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், பாா்த்திபன், முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரணியை பாஜக மாநில துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத் தொடங்கிவைத்தாா்.
மாநில துணைத் தலைவா் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவா் வடிவேல் பழனி, முன்னாள் மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன், நகரத் தலைவா்கள் வனிதசுதா, விஜயன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பேரணியில் பங்கேற்றோா் தேசியக் கொடியேந்தி இந்திய ராணுவத்துக்கும், பிரதமா் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.
நான்குமுனை சந்திப்பில் தொடங்கிய பேரணி சென்னை-திருச்சி சாலை, மாவட்ட ஆட்சியரக பெருந்திட்டப் பகுதி வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையம் எதிரில் நிறைவடைந்தது.
முன்னதாக 70 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட தேசியக் கொடியையும் பாஜகவினா் ஏந்தி வந்தனா்.