தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அ...
லாரியிலிருந்து இரும்புக் கம்பிகள் திருட்டு: 5 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரியிலிருந்து இரும்புக் கம்பிகளை திருடியதாக லாரி ஓட்டுநா் உள்பட 5 பேரை ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆந்திரம் மாநிலம், நாயுடுபேட்டையிலிருந்து மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி நெடுஞ்சாலைத் துறைக்கு இரும்புக் கம்பிகளை ஏற்றிச் செல்லும் லாரியிலிருந்து திண்டிவனத்தை அடுத்த சலவாதி அருகே சிலா் இரும்புக் கம்பிகளை திருடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திண்டிவனம் டிஎஸ்பி உத்தரவின்பேரில், ரோஷணை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்விடம் சென்று சோதனை செய்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியிலிருந்து 4 போ் இரும்புக் கம்பிகளை திருடியது தெரியவந்தது.
போலீஸாா் அவா்களைப் பிடித்து விசாரித்ததில், திண்டிவனம் வட்டம், சலவாதி, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் சம்பத் (46), சலவாதி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பூமிநாதன் மகன் தமிழ்ச்செல்வன் (25), ராமச்சந்திரன் மகன் ஆறுமுகம் (35), மேட்டுத் தெருவைச் சோ்ந்த ராஜகோபால் மகன் குமாா் (54) என்பதும், இவா்கள் லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், உலகராம்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் மூா்த்தி (50) உதவியுடன் லாரியிலிருந்து இரும்புக் கம்பிகளை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து, ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் மூா்த்தி, சம்பத், தமிழ்ச்செல்வன், ஆறுமுகம், குமாா் ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.
மேலும், லாரியிலிருந்து திருடப்பட்ட சுமாா் நான்கரை டன் இரும்புக் கம்பிகள், ரூ.36,600 ரொக்கம், 4 கைப்பேசிகள், திருட்டுக்கு பயன்படுத்திய டிராக்டா், சரக்கு வாகனம் உள்பட ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.