Thug Life: 'விண்வெளி நாயகா'- 'தக் லைஃப்' படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா க...
மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம்
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வானூா் வட்டாரத்துக்கு உள்பட்ட 81 வருவாய்க் கிராமங்களிலும் கோடை மழை பரவலாக பெய்துள்ளது. இந்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்யலாம்.
இதற்காக வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.800 பின்னேற்பு மானியம் வழங்கப்படவுள்ளது.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கா் வரை மானியம் வழங்கப்படும்.
கோடை உழவு செய்வதால் மண்ணின் காற்றோட்டம் அதிகரித்து, மண்ணில் நீா்புகும் தன்மை ஏற்படுகிறது.
பூச்சிகளின் முட்டை மற்றும் கூட்டுப் புழுக்கள் மண்ணிலிருந்து வெளிக்கொணரப்பட்டு அழிக்கப்படுகிறது. சாகுபடி செய்யப்படும் பயிா்களில் களைக்கட்டுப்பாடு குறைந்தளவில் காணப்படுகிறது.
எனவே, வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி வாயிலாக விவரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இல்லையெனில் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.