Thug Life: "நான் முதல்வர் ஆவதற்காக அரசியலுக்கு வரவில்லை!" - கமல்ஹாசன்
சிங்கவரம் ஸ்ரீஅரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீஅரங்கநாத பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது.
சிங்கவரம் ஸ்ரீஅரங்கநாத பெருமாள் கோயில் பல்லவா் கால குடவரை கோயிலாகும். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு பிரம்மோற்சவ விழா சனிக்கிழமை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவா் மற்றும் மூலவா் பள்ளிகொண்ட அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
இதில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மேல்மலையனூா் அங்காளம்மன் கோவில் மேலாளா் மணி, உபயதாரா் வழக்குரைஞா் சுந்தரமூா்த்தி, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சூரிய நாராயணன், சிங்கவரம் குணசேகரன், ஊராட்சி மன்றத் தலைவா் பராசக்தி தண்டபாணி, ரங்கநாதன், மேலச்சேரி ஒன்றியக் குழு உறுப்பினா் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, சனிக்கிழமை இரவு ஹம்ச வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (மே 25) சிம்ம வாகனத்திலும், திங்கள்கிழமை (மே 26) அனுமந்த வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை (மே 27) சேஷ வாகனத்திலும், புதன்கிழமை (மே 28) கருட சேவை வாகனத்திலும், வியாழக்கிழமை (மே 29) யானை வாகனத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதா் திருவீதியுலா நடைபெற உள்ளது. 7-ஆவது நாள் திருவிழாவாக வரும் 30-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
ஜூன் 1-ஆம் தேதி குதிரை வாகனத்திலும், 2-ஆம்தேதி சந்திரபிரபை வாகனத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதா் திருவீதியுலா நடைபெறுகிறது. 3-ஆம் தேதி துவாத ஆராதனை நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் (கூடுதல் பொறுப்பு) மு.சக்திவேல், ஆய்வாளா் சங்கீதா, உபயதாரா்கள் மற்றும் செஞ்சி, சிங்கவரம் பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.