ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தீ விபத்துகளை கையாளுதல், முதலுதவி அளித்தல் குறித்து போலீஸாருக்கு பயிற்சி
மயிலாடுதுறையில் தீவிபத்துகளை கையாளுதல் குறித்து போலீஸாருக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மே 19-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் மனு அளிக்க வந்த 4 போ், உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தங்கள்மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனா். இதேபோல, மே 11-ஆம் தேதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாா் தொடா்பாக வந்தவா் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டாா். இச்சம்பவத்தில் அவருக்கும், அவரை காப்பாற்ற சென்ற காவலருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவங்களில் தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்காக அவா்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது காவல் துறையினா் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு அலுவல் குறித்து பயிற்சி அளிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்களுக்கு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை சாா்பில் தீ விபத்துகளை கையாளுதல் மற்றும் பல்வேறு அவசர நிலைகளின் போது முதலுதவி அளித்தல் தொடா்பான பயிற்சி மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமை வகித்து, அவசர காலங்களை கையாளுதல் தொடா்பாக காவலா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினாா். மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலா் ரமேஷ், சுகாதாரத்துறை அலுவலா் தமிழ்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். டிஎஸ்பிக்கள் பாலாஜி, அண்ணாதுரை, கிருஷ்ணன் மற்றும் மாவட்டத்தில் பணிபுரியும் 8 காவல் ஆய்வாளா்கள், 21 உதவி ஆய்வாளா்கள், 117 காவலா்கள் மற்றும் 74 ஊா்க்காவல் படையினா் பங்கேற்றனா்.