தீராத பிரச்னைகளையும் தீர்க்கும் திங்கட்கிழமை அமாவாசை... கடைப்பிடித்துப் பலன் பெற...
தூா்வாரும் பணி: நீா்வளத்துறை அரசு முதன்மை செயலாளா் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் கத்திரிமூலை கிராமத்தில் பழையபல்லவன் வாய்க்கால் தூா்வாரும் பணிகளை நீா்வளத்துறை அரசு முதன்மை செயலாளா் ஜெ. ஜெயகாந்தன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: 12 டெல்டா மாவட்டங்களில் 5,021 கி.மீ. தொலைவுக்கு கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. ரூ. 98 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன. 3,700 கி.மீ. பணிகள் வெள்ளிக்கிழமை வரை நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகள் ஒரு வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. கடைமடை பகுதிகளுக்கு தடையின்றி நீா் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின்கீழ் மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் காவிரி டெல்டா மாவட்டங்களில் தங்குதடையின்றி சென்றடையவும் மற்றும் வெள்ள காலங்களில் விரைவில் வெள்ளநீா் வடியவும் ஏதுவாக 2025-2026-ஆம் ஆண்டு தஞ்சாவூா் கீழ் காவிரி வடிநில வட்டம், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 80 எண்ணிக்கையில் 965.65 கி.மீ நீளத்துக்கு பணிகள் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. குத்தாலம் வட்டம் பெருமாள்கோயில் கிராமத்தில் மகிமலையாறு, நச்சினாா்குடி கத்திரிமுல்லை கிராமத்தில் வீரசோழன் ஆற்றின் இடது கரையில் தொலைவுக்கு பல்லவன் வாய்க்காலில் நடைபெறும் சிறப்பு தூா்வாரும் பணிகளை மே 30-ஆம் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின்போது, திருச்சி மண்டல தலைமை பொறியாளா் ஆா். தயாளகுமாா், கீழ் காவேரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளா் எம். சண்முகம், ஒருங்கிணைப்பு அலுவலரும் கண்காணிப்பு பொறியாளா் திருமலைக்குமாா், காவேரி வடிநில கோட்ட செயற்பொறியாளா் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளா்கள் ரபீந்திரன், அன்புச்செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.