தென்னக ரயில்வேயை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு
சீா்காழியில் ரயில்கள் நின்று செல்லாததையடுத்து தென்னக ரயில்வேயை கண்டித்து போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நலசங்க அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவா் ஜெக. சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
இதில், சீா்காழியில் அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்ல வலியுறுத்தியும், வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவேண்டியும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாததால் தென்னக ரயில்வேயை கண்டித்து தண்டவாளத்தில் தலைவைக்கும் போராட்டம் நடத்துவது, வைத்தீஸ்வரன்கோயில் நகர வா்த்தக சங்கம் கடையடைப்பு நடத்துவது, காா், வேன் ஆட்டோ மினிலாரி ஓட்டுநா் உரிமையாளா் சங்கம், அனைத்து அரசியல் கட்சிகள் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது. மாவட்ட பொது செயலாளா் கண்ணன், மாவட்ட பொருளாளா் தில்லை. நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.