பாகிஸ்தானுடன் ராகுல் நேரடி ஒத்துழைப்பு! பாஜக கண்டனம்!
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பூஞ்ச் பகுதியைப் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு சோகமான நிகழ்வு என்று குறிப்பிட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
ஷெஷாத் கூறியதாவது, ``பூஞ்ச் பகுதியில் நடத்தப்பட்டதை சோகமான நிகழ்வு என்று ராகுல் காந்தி இன்று கூறினார். பயங்கரவாதத் தாக்குதலை சோகமான நிகழ்வு என்று அவர் கூறுகிறார். நமது அப்பாவி பொதுமக்கள், பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டனர்.
ஆலயங்களும் பள்ளிகளும் தாக்குதலுக்கு உள்ளாகின. அதில் குழந்தைகளும் பலியாகினர். இதனை ராகுல் காந்தி மூடி மறைக்கிறார். ஆனால், இதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஏனெனில், பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை காங்கிரஸ் பலமுறை மூடி மறைத்துள்ளது. ராகுல் காந்தியும் அவரது குடும்பத்தினரும் எப்போதுமே பாகிஸ்தானின் குற்றங்களை மூடி மறைக்கின்றனர்.
இது ஒரு தற்செயலான நிகழ்வல்ல. பயங்கரவாதத் தாக்குதலை சோக நிகழ்வு என்றழைப்பதை ராகுல் நிறுத்திக் கொள்ள வேண்டும். ராகுல் காந்தியின் இந்தக் கருத்து, பாகிஸ்தானுடன் நேரடி ஒத்துழைப்பைத்தான் காட்டுகிறது’’ என்று தெரிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பூஞ்ச் பகுதியை இன்று (மே 24) நேரில் ஆய்வு செய்த ராகுல் காந்தி, அங்கிருந்த மக்களுடன் உரையாடினார்.