கா்னல் குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: பாஜக அமைச்சரிடம் எஸ்ஐடி விசாரணை தொடக்கம்
'கொலை மிரட்டல் விடுத்தவரை கண்டறியாமல் விளம்பரப்படுத்துவதா?' - வேலுமணி வருத்தம்!
கோவை அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது,

“கோவை மாநகராட்சி அறிவித்துள்ள வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். அடிப்படை திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டுக்கு திமுக எந்தத் திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் சிரமத்தில் உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் மட்டுமே மாற்றம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி இருந்தபோது மத்திய அரசிடம் அதிக நிதிகள் வாங்கப்பட்டன.

தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. எந்த முன்னெச்சரிக்கையும் செய்யப்படாததால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நீர்நிலைகள் தூர் வாரப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளோம்.
மாநகராட்சியில் எந்த வேலையும் நடப்பதில்லை. வரி உயர்வு மட்டுமே நடக்கிறது. எனக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. பொதுச் செயலாளர் அறிவுறுத்தல் அடிப்படையில் வழக்கறிஞர் அணி, மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தனர். மிரட்டல் கடிதம் அனுப்பியவர்கள் யார் என்று கண்டறியாமல், அதை ஊடகங்களுக்கு கொடுத்து விளம்பரப்படுத்தியது வருத்தமாக உள்ளது.

கட்சிக்கும், மக்களுக்கும் எப்போதும் விசுவாசமாக என் பயணம் தொடரும். எனக்கு மட்டுமல்ல, யாருக்கு இது போன்ற கொலை மிரட்டல் வந்தாலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.