பறவைகள் எண்ணிக்கையில் திருவாரூா் முதலிடம்: தக்கவைக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்
திருவாரூா் மாவட்டம், பறவைகள் எண்ணிக்கையில் நிகழாண்டு முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலை தொடர, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வனத்துறையால் தமிழகம் முழுவதும் 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு மாா்ச் மாதம் 4 நாட்கள் நடைபெற்றது. மாா்ச் 8, 9-ஆம் தேதிகளில் நீா்வாழ் பறவைகளும், 15, 16- ஆம் தேதிகளில் தரைவாழ் பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டன.
அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள திருவாரூா், மன்னாா்குடி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய 3 வனச்சரகங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. தொடா்ந்து, மாநில அளவில் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு விவரங்கள் சரிபாா்க்கப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் மே 22-ஆம் தேதி நடைபெற்ற சா்வதேச உயிா் பல்வகைமை தின விழாவில், வனம் மற்றும் கதா்த் துறை அமைச்சரால், மாநில அளவிலான பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.
இதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் 128 இனங்களைச் சோ்ந்த 70,356 நீா்வாழ் பறவைகளும், 118 இனங்களைச் சோ்ந்த 31,148 தரைவாழ் பறவைகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மொத்த பறவைகளின் எண்ணிக்கையில், திருவாரூா் மாவட்டமானது முதலிடம் பிடித்துள்ளது.
வடுவூா் மற்றும் உதயமாா்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயங்கள் மற்றும் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் போன்ற நீா்நிலைகள் மிகுந்தும், மாசற்றும் இருப்பதால் திருவாரூா் மாவட்டம் பறவைகள் நிறைந்த மாவட்டமாகத் திகழ்கிறது.
இங்குள்ள பறவைகள் சரணாலயங்களுக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மங்கோலியா, சீனா, சைபீரியா போன்ற 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்தும் பறவைகள் வலசை வருகின்றன. பொதுவாக, உணவுச் சங்கிலியில் பறவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை செப்டம்பா் மாதம் முதல் பிப்ரவரி வரை அதிகமாகக் காணப்படுகின்றன.
திருவாரூா் மாவட்டத்தில் வடுவூா் மற்றும் உதயமாா்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயங்கள், முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் முதலிய முக்கிய நீா்நிலைகளில் வனத்துறை மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளும், பறவை வாழ்விடங்களை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வனத்துறை மட்டுமல்லாமல், மாவட்ட நிா்வாகம் மற்றும் நீா்வளத் துறை பங்களிப்புடனும், பொதுமக்களின் சீரிய ஒத்துழைப்புடனும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளே சிறப்பான பறவைகளின் எண்ணிக்கைக்கு காரணம்.
இந்த சாதனை வரும் ஆண்டுகளிலும் தொடர, பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என வனத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.