கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்...
நிதி ஆயோக்: முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பும்… திமுக-வின் குற்றச்சாட்டுகளும்!
நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் ஆட்சிக் குழு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை தொடங்கியிருக்கிறது. அனைத்து மாநில முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள், யூனியன் பிரதேச நிர்வாகிகள் போன்றவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதேபோல தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தை, புதுச்சேரி முதல்வரான ரங்கசாமி புறக்கணித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்துப் பேசிய புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.ஏ சிவா, ``ஒன்றியத்தில் பா.ஜ.க அரசு வந்த பிறகு திட்டக்குழுவை கலைத்துவிட்டு, நிதி ஆயோக் என்ற அமைப்பை உருவாக்கியது.
மாநில வளர்ச்சி, திட்ட செயல்பாடுகள், மாநிலத்திற்கான நிதி ஆதாரங்கள் போன்றவைகளை விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. பின்தங்கி இருக்கும் பல மாநிலங்கள், தங்களுக்கான நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் கோரிக்கை வைக்கும். ஆனால் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை நம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணித்திருப்பதன் நோக்கம் புரியவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்தும் பிரதமரிடம் நேரடியாக விளக்குவதற்கான இந்த வாய்ப்பை முதல்வர் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒரே கூட்டணியில் இருக்கும் முதல்வர் ரங்கசாமி, அந்த கூட்டணிக்கு தலைமையேற்கும் பிரதமரை சந்தித்து மாநில வளர்ச்சிக்கு நிதி கேட்காமல் புறக்கணித்தது ஏன் ?
`கட்சியின் கொள்கையே மாநில அந்தஸ்து பெறுவதுதான்’ என்று கூறி, அதற்காக இரண்டு முறை தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர், அந்தக் கோரிக்கையை இந்தக் கூட்டத்தில் நேரடியாக வைத்திருக்கலாமே ? தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்று பொதுவெளியில் புலம்பித் தீர்க்கும் முதல்வர் ரங்கசாமி, அதற்காக இந்தக் கூட்டத்தை ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை ?
மற்ற மாநிலங்களுக்கு 42% ஒன்றிய அரசின் நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ஒன்றிய அரசின் 70% நிதியைப் பெற்றுக் கொண்டிருந்த புதுச்சேரிக்கு, தற்போது 25% கூட கிடைக்கவில்லை. இந்த அவலத்தை பிரதமரிடம் சுட்டிக் காட்டியிருக்கலாம்.
ஒன்றிய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களுக்கு யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு 100% நிதியுதவியை மத்திய அரசு வழங்க கோரி இருக்கலாம். மேலும் புதுச்சேரியின் நீண்டகால கடனான ரூ.11.500 கோடியை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைத்திருக்கலாம். புதிய சட்டமன்ற புதிய கட்டடம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுற்றுலா வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், மாநில வளர்ச்சி முடங்கி கிடப்பதை பிரதமரிடம் சுட்டிக்காட்டி இருக்கலாம்.
தமிழகத்தில் அடிப்படை தேவையான கல்விக்கான நிதியை கூட ஒதுக்காத ஒன்றிய அரசு மீது சட்டப் போர் நடத்தி வரும் எங்கள் தளபதி ஸ்டாலின் அவர்கள் கூட இந்தக் கூட்டத்தை புறக்கணிக்கவில்லை. இப்படியான சூழலில் நம் முதல்வர் புறக்கணிப்பது ஏன் என்பது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.