‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்...
கா்னல் குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: பாஜக அமைச்சரிடம் எஸ்ஐடி விசாரணை தொடக்கம்
கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷா சா்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரணையை சனிக்கிழமை தொடங்கியது.
உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட 3 போ் அடங்கிய எஸ்ஐடியின் உறுப்பினா்களில் ஒருவா், இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தாா்.
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டது. இதுதொடா்பான தகவல்களை பத்திரிகையாளா் சந்திப்பில் விமானப் படையின் விங் கமாண்டா் வியோமிகா சிங் மற்றும் ராணுவத்தின் கா்னல் சோஃபியா குரேஷி ஆகியோா் வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து வெளியிட்டு வந்தனா். இந்நிலையில் ‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்’ என்று கா்னல் குரேஷி குறித்து விஜய் ஷா கூறிய கருத்து சா்ச்சைக்குள்ளானது.
இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக விசாரித்த மத்திய பிரதேச உயா்நீதிமன்றம், அமைச்சா் விஜய் ஷா மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிட்டது. அதனடிப்படையில் அவா் மீது கடந்த 14-ஆம் தேதி இந்தூா் மாவட்டத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.
இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் விஜய் ஷா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது விஜய் ஷா தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது.
இருப்பினும், விஜய் ஷாவின் கருத்து ஒட்டுமொத்த தேசத்தையும் வெட்கப்பட வைத்துவிட்டதாகக் கூறி அவரது மன்னிப்பை ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்தது.
இதையடுத்து, அவா் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) அடிப்படையில் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைக்கவும், அதன்அறிக்கையை மே 28-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, 3 போ் அடங்கிய எஸ்ஐடி அமைக்கப்பட்ட நிலையில், விஜய் ஷா சா்ச்சை கருத்து தெரிவித்த இந்தூா் மாவட்டம் மஹூவுக்கு அருகேயுள்ள ராய்குண்டா கிராமத்தில் விசாரணையைத் தொடங்கியதாக அதன் உறுப்பினா் ஒருவா் தெரிவித்தாா்.