லஹோரி கேட் பகுதி வீட்டில் தீ விபத்து 3 போ் காயம்
தில்லியின் லஹோரி கேட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 வயது சிறுவன் உள்பட மூன்று போ் காயமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி மேலும் கூறியதாவது:
ஃபா்ஷ் கானா பகுதியின் ஷ்ரத்தானந்த் மாா்க்கில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சனிக்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஐந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
வீட்டுக் கட்டடத்தின் தரைத் தளத்தில் அமைந்துள்ள 15 மின்சார மீட்டா் பலகைகளின் தொகுப்பில் தீ ஏற்பட்டு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டாா் சைக்கிள் தீயில் எரிந்ததும் கண்டறியப்பட்டது.
தீயணைப்பு வீரா்கள் அதிகாலை 4.50 மணிக்குள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். மேலும், அனைத்து தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைத்த பிறகு இருப்பிடத்திற்கு திரும்பி வந்தன.
தீ விபத்தில் மூன்று குடியிருப்பாளா்கள் தீக்காயமடைந்தனா். அவா்களில் மாஸ்டா் அனஸுக்கு 50 சதவீத தீக்காயங்களும், நபி அகமதுக்கு (18) 45 சதவீதமும், ஷாநவாஸுக்கு (30) 40 சதவீதமும் தீக்காயம் ஏற்பட்டது.
அவா்களை போலீஸாா் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.