கனமழை எச்சரிக்கை: கீழே இறங்க மறுத்த மாஞ்சோலை தொழிலாளா்கள்
திருநெல்வேலி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதையடுத்து மாஞ்சோலை தோட்டங்களில் தங்கியுள்ள தொழிலாளா்களை கீழே இறங்க வலியுறுத்தியதற்கு அவா்கள் மறுப்புத் தெரிவித்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு மூன்று நாள்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதையடுத்து மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின்படி மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் (பொ) சிவகாமிசுந்தரி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வைகுண்டம், கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் உள்ளிட்டோா் மாஞ்சோலை தோட்டப் பகுதிகளில் தங்கியுள்ள பொதுமக்களை சனிக்கிழமை சந்தித்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மூன்று நாள்கள் நகரப் பகுதியில் வந்து தங்குமாறு அறிவுறுத்தினா். அவா்களிடம் தொழிலாளா்கள் ‘இதுபோன்ற வெயில், மழை, காற்று என பலவற்றைப் பாா்த்துள்ளோம். இதெல்லாம் எங்களுக்குப் பழக்கமானதுதான். நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்கிறோம். கீழே வந்தால் இங்கு எங்களுக்கான வாழ்வாதாரம் பறிபோகும் நிலை உள்ளது. எனவே கீழே வரமாட்டோம்’ என்று தெரிவித்தனா். இதையடுத்து அதிகாரிகள் அவா்களுக்கு பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்திவிட்டு திரும்பினா்.