Thug Life "கடல் படத்துக்கு வாய்ப்பு தேடினேன்; 14 வருஷம் கழிச்சு இன்னைக்கு.."- நெகிழும் அசோக் செல்வன்
'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். இன்றைய தினம் சென்னை சாய் ராம் கல்லூரியில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவை நடத்தி வருகின்றனர். படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.

அசோக் செல்வன் பேசும்போது, "2011-ல 'கடல்' படம் பண்ணப்போறாங்கனு அறிவிப்பு வந்தது. போட்டோஸ் கொடுத்துட்டு சாரைப் பார்க்கணும்னு காத்திருந்தோம். சார் பார்க்க முடியாதுனு சொல்லிட்டாங்க. மறுபடியும் மூன்று நாட்களுக்குப் பிறகு தமிழ் தெரிந்த உதவி இயக்குநர்கள் தேடுறாங்கனு தெரிஞ்சு வாய்ப்புக்காக போனேன். அப்போ சிவா ஆனந்த் சாரை சந்திச்சேன். அப்போ ஒரு குறுந்தொகை பாடலையோ, புறாநானூறு பாடலையோ சொல்லி எந்த பாடல் இதுனு சொல்லி கண்டுபிடிக்கச் சொன்னாங்க. எனக்கு தெரில. எங்களுக்கு தமிழ் நல்லாவே தெரியும்னு போகச் சொல்லிட்டாங்க.
அந்தப் பையன்கிட்ட 14 வருஷம் கழிச்சு இப்படியான ஒரு கதாபாத்திரத்திற்குக் கூப்பிடுவார்னு சொன்னால் அவன் நம்புவான். அவனுக்கு நம்பிக்கைதான் எல்லாம். மணி சார் படத்துல நடிக்கணும்னு எனக்கு கனவு. நான் தேடின குரு கமல் சார்தான். அவர் ஒரு முறை 'என்னை குருனு கூப்பிடாதீங்க. நான் சினிமாவின் மாணவன்'னு சொல்லியிருந்தாரு. நானுமே சினிமாவின் மாணவன்தான் சார். ஆனால், என்னுடைய சினிமா நீங்கதான். 'விஸ்வரூபம்' படத்தோட பிரச்னை சமயத்துல வெளில நின்ன 100 பேர்ல நானும் ஒருத்தன்.

இந்த துரோனாச்சாரியார் கட்டவிரல் கேட்கமாட்டாரு. குருதட்சணையாக நாங்க நல்ல படங்கள் பண்றதுதான் அவருக்கு செய்கிற விஷயங்களாக இருக்கும். எனக்கு அதிகப்படியான காட்சிகள் கமல்சார்கூடதான். ரஹ்மான் சார் இசையமைக்கும் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. சிம்பு அண்ணாவை மீட் பண்றதுக்கு முன்னாடி வேறு ஒண்ணு நினைச்சிருந்தேன். இப்போ வேற மாதிரி ஒருத்தராக இருக்காரு. எனக்காக நிறைய விஷயங்கள் சொல்லியும் கொடுத்தாரு. நாசர் சாரை நான் நைனானுதான் கூப்பிடுவேன். அவரும் நானும் 400 படம் நடிச்சிட்டோம்னு நினைக்கிறேன் (சிரித்துக் கொண்டே...)." என்றார்.