கேரளத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை! பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் அம்மாநிலத்தின் ஏராளமான மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அம்மாநிலம் முழுவதும் பெய்துவரும் கனமழை அடுத்த சில நாள்களுக்கு மேலும், தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று (மே 24) இந்திய வானிலை ஆய்வு மையம், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், மீதமுள்ள 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதையடுத்து, அம்மாநிலத்தில் நாளை (மே 25), 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால், கனமழை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வரும் மே 26 ஆம் தேதியன்று, கேரளத்தின் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கனமழை எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
கேரளத்தில், கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு, தற்போது தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளது. அரபிக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருமாறி மகாராஷ்டிரம் அருகில் இன்று முற்பகலில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: குஜராத்: பாகிஸ்தான் உளவாளியிடம் தகவல்களைப் பகிர்ந்தவர் கைது!