ரஷியா - உக்ரைன் இடையே மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம்!
ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெரியளவில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் போரில் இருநாடுகளுக்கும் இடையில் மிகப் பெரியளவில் போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் இன்று (மே 23) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ள அவர், ரஷியா மற்றும் உக்ரைன் இடையில் மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம் முடிவடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், “இது பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்குமா?’ என்ற கேள்வியையும் அந்தப் பதிவில் அவர் முன்வைத்துள்ளார்.
ஆனால், இருநாடுகளுக்கும் இடையில் போர்க் கைதிகளின் பரிமாற்றம் இன்று (மே 23) காலை முதல் நடைபெற்று வருவதாகவும் அது இன்னும் முடிவுக்கு வரவில்லை எனவும் உக்ரைனின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய நடவடிக்கையைப் பற்றி ரஷியா இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, கடந்த வாரம் முதல்முறையாக ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள், துருக்கியில் நேரடியாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். வெறும் 2 மணி நேரம் மட்டுமே அந்தச் சந்திப்பு நடைபெற்றபோதும், இருநாடுகளும் போர்க் கைதிகளின் பரிமாற்றத்துக்கு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியா அல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஆப்பிள் ஐஃபோன் தயாரித்தாலும் 25% வரி: டிரம்ப்