மணிப்பூா் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்: மத்திய அரசு அறிவிப்பு
மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி-ஜோ சமூகத்தினருக்கும் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து இரு சமூகத்தினருக்கு இடையே நீடித்து வந்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா். தற்போது வரை அங்கு முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை.
இந்நிலையில், அங்கு நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடா்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சுராசந்த்பூா் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம் சிறப்பு என்ஐஏ நீதிமன்றமாக செயல்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூா் முழுவதும் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை இந்த நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.