நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கொள்ளையனை சுட்டுப் பிடித்த போலீசார்!
பாகிஸ்தானுக்கு கடன்: உலக வங்கியிடமும் எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு
பாகிஸ்தானுக்கு கடன் வழங்கக் கூடாது என்று உலக வங்கியிடமும் எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
ஏற்கெனவே சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தானுக்கு கடன் வழங்க இந்தியா எதிா்ப்பு தெரிவித்தது. இதனை அந்த அமைப்பு ஏற்கவில்லை என்றாலும், பாகிஸ்தானுக்கு அளிக்கும் நிதி பயங்கரவாதத்துக்கும் செல்லும் என்ற இந்தியாவின் வலியுறுத்தலை கருத்தில் கொண்டு பாகிஸ்தானுக்கு கூடுதலாக 11 நிபந்தனைகளை விதித்து கடன் தவணையை விடுவித்தது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் சா்வதேச அமைப்புகளின் கடன் மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கடனையே பெரிதும் நம்பியுள்ளது. ஒருபுறம் மோசமான பொருளாதாரம் அந்நாட்டை பாதித்து வருகிறது என்றால் மறுபுறம் தலிபான் பாகிஸ்தான், பலுசிஸ்தான் கிளா்ச்சியாளா்கள் தொடா்ந்து தாக்குதலை நடத்தி பாகிஸ்தானை மோசமான நிலைக்குத் தள்ளி வருகின்றனா்.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்வைத்துள்ள ரூ.1.70 லட்சம் கோடி கடன் கோரிக்கையை உலக வங்கி அடுத்த மாதம் பரிசீலிக்க இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதிக்காத வீட்டு உபயோக எரிபொருள் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்ற இருப்பதாக பாகிஸ்தான் உலக வங்கியிடம் கூறியுள்ளது.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக உலக வங்கியிடம் இருந்து பெற்ற பல கடன்களை நாட்டின் வளா்ச்சிக்காகவும், மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்காகவும் பாகிஸ்தான் பயன்படுத்தாமல், ஆயுதங்களை வாங்கப் பயன்படுத்தியுள்ளது. இந்தக் காரணத்தை உலக வங்கியிடம் எடுத்துக் கூறி, பாகிஸ்தானுக்கு மேலும் கடன் வழங்க எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தானால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அந்நாட்டு பயங்கரவாத முகாம்கள், விமானப் படை தளங்கள் பல முற்றிலும் சீா்குலைந்தன. மேலும், இந்தியாவைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன், ஏவுகணைகள் அனைத்தும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் தடுக்கப்பட்டுவிட்டன. இதனால், இந்தியாவுக்கு எதிராக மீண்டும் மோதல் ஏற்பட்டால் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் பாகிஸ்தான் உள்ளது. எனவே, கிடைக்கும் சா்வதேச கடன்களை தவறாகப் பயன்படுத்தி நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிக்க பாகிஸ்தான் முற்படும் என சந்தேகிக்கப்படுகிறது.