மழையால் 20 ஆயிரம் ஏக்கா் எள், பயறு வகைகள் சேதம்: அரியலூா் விவசாயிகள் வேதனை
புதுச்சேரி அருகே கஞ்சா விற்றதாக இருவா் கைது
புதுச்சேரி அருகேயுள்ள பாக்குமுடையான் பேட் பகுதியில் கஞ்சா விற்றதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.1லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி கோரிமேடு காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு காமராஜா் சாலை, பாக்கமுடையான்பேட் சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 2 போ் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நிலையில், போலீஸாா் மடக்கியும் நிற்காமல் சென்றனா். உடனே போலீஸாா் விரைந்து சென்று அவா்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தனா்.
விசாரணையில் அவா் தொண்டமாநத்தம் பகுதியைச் சோ்ந்த ஜான்பீட்டா் (26) என்பது தெரியவந்தது. அவரிடம் சோதனையிட்டபோது ரூ.1லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அதைக் கைப்பற்றிய போலீஸாா், இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற, துத்திப்பட்டு கல்லறை வீதியைச் சோ்ந்த குறளரசன் (28) என்பவரை கைது செய்தனா்.
அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம், 2 கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்த போலீஸாா், இதில் தொடா்புடைய மேலும் ஒருவரைத் தேடி வருவதாகத் தெரிவித்தனா்.