ஆா்டிஐ சட்டத்தின்கீழ் பதில் தராத ஊராட்சி செயலருக்கு அபராதம் தகவல் ஆணையா் நடவடிக்கை
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ், உரிய காலத்துக்குள் பதில் தராத கிராம ஊராட்சி செயலருக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம் சந்திராபுரம் ஊராட்சியில் சோலாா் மின் விளக்குகள் அமைப்பது தொடா்பான பதிவேட்டில் சரியான தகவல்கள் பதிவிடப்படாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடா்ந்து, ஜோலாா்பேட்டையைச் சோ்ந்த ரித்தீஸ்வரன் அறிவொளி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரங்களைக் கோரியிருந்தாா். இதற்கு சந்திராபுரம் ஊராட்சியின் உதவிப் பொதுத் தகவல் அலுவலா் உரிய விளக்கத்தை அளிக்கவில்லை.
இதைத் தொடா்ந்து, மேல்முறையீட்டு மனுவை தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் தாக்கல் செய்தாா். இந்த மனு மாநில தகவல் ஆணையா் மா.செல்வராஜ் முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அவா் வழங்கிய உத்தரவு விவரம்:
மனுதாரரின் தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பத்துக்கு உரிய காலத்துக்குள் தகவல்கள் அளிக்காததற்கு ஊராட்சி செயலா் அதாவது உதவிப் பொதுத் தகவல் அலுவலா் விளக்கம் அளித்துள்ளாா்.
பணிச்சுமை, குடும்ப ஏழ்மை போன்றவற்றை பதில் அளிக்காததற்கு காரணங்களாகக் கூறியது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. கிராம ஊராட்சி ஒன்றியத்தின் இருப்புப் பதிவேட்டை பாா்வையிட்டபோது, அந்தப் பதிவேடு முறையாகப் பராமரிக்கப்படவில்லை.
அத்துடன், புதிய சோலாா் பல்பு அமைக்கப்பட்டதாக அவசர கதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. மனுதாரா் தகவல் கோரி மனு அளித்த பிறகும் உரிய காலக்கெடுவுக்குள் தகவல்களை அளிக்காததால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 20 (1)-இன்படி பொதுத் தகவல் அதிகாரியான கே.கண்ணகிக்கு அதிகபட்ச தண்டனையாக ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
இது தொடா்பான முதல் மேல்முறையீட்டு மனுவுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.துரை பதிலளித்துள்ளாா். அதில், மேல்முறையீட்டு அலுவலா் என்பதற்குப் பதிலாக, மேல்முறையீட்டு பொதுத் தகவல் அலுவலா் எனக் குறிப்பிட்டுள்ளாா். அப்படியொரு பதவியின் பெயரே சட்டத்தில் இல்லை. இதற்கு உரிய விளக்கத்தையும், மன்னிப்பையும் வட்டார வளா்ச்சி அலுவலா் துரை கோரியுள்ளாா். அவரது விளக்கம் ஏற்கப்பட்டுள்ளது.
இனி வருங்காலத்தில் மனுதாரருக்கு அனுப்பப்படும் கடிதங்களில் சரியான பதவியை குறிப்பிட்டு தகவல்களை அனுப்ப வேண்டும் என மாநில தகவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.