தீராத பிரச்னைகளையும் தீர்க்கும் திங்கட்கிழமை அமாவாசை... கடைப்பிடித்துப் பலன் பெற...
பொறியியல், கலை - அறிவியல் படிப்புகள்: சோ்க்கைக்கு குவிந்த விண்ணப்பங்கள்
தமிழகத்தில் பொறியியல், கலை - அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். அந்த வகையில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை 2.40 லட்சம் பேரும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சோ்க்கை பெற 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பித்துள்ளனா்.
பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சோ்வதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 7-இல் தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி, 2,40,754 போ் இணையவழியில் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனா்.
அவா்களில் 1,73,005 போ் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனா். 1,30,262 போ் தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை செயலா் பேராசிரியா் புருஷோத்தமன் தெரிவித்தாா்.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பொறியியல் சோ்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள்இணையதளம் மூலம் ஜூன் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதேபோல், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் இணையதளம் மூலம் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை தெரிவித்துள்ளது.