பாகிஸ்தான் பள்ளிப்பேருந்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப்பேருந்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
பலூசிஸ்தான் குஸ்தார் மாவட்டத்தில், கடந்த மே 21 ஆம் தேதியன்று ராணுவப் பள்ளிக்கூடத்தின் பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இந்தத் தாக்குதலில், 39 குழந்தைகள் உள்பட 53 பேர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் அந்நாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், அந்தப் பேருந்திலிருந்த 2 ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் அஹமத் ஷரீஃப் கூறுகையில், இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ஏராளமான குழந்தைகளின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு தற்போது வரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் அப்பகுதியில் இயங்கி வரும் பலூச் லிபரேஷன் ஆர்மியைச் சேர்ந்தவர்கள் இதை நடத்தியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: ரஷியா - உக்ரைன் இடையே மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம்!