ரஷியா - உக்ரைன் இடையே 390 போர்க் கைதிகள் பரிமாற்றம்!
ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
ரஷியா - உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூழலில், துருக்கியில் கடந்த வாரம் முதல்முறையாக இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, இருநாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, முதல்முறையாக நேற்று (மே 23) மிகப் பெரியளவில் போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றது. இதில், இருநாடுகளும் தலா 390 போர்க் கைதிகளை விடுவித்துள்ளதாக ரஷியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உக்ரைன் மற்றும் ரஷியாவால் சிறைப்படிக்கப்பட்ட தலா 270 வீரர்கள் மற்றும் 120 பொது மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விடுதலையான ரஷிய வீரர்கள் பெலாரஸ் நாட்டின் பகுதியில் ரஷிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அங்கு அவர்களுக்கும் மருத்துவ மற்றும் மனநல உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலன்ஸ்கி கூறுகையில், ரஷியாவுடன் மேற்கொள்ளப்பட்ட போர்க் கைதிகள் பரிமாற்றத்தில், 1000-க்கு 1000 எனும் கொள்கையின் அடிப்படையில், 390 உக்ரைன் நாட்டினர் தாயகம் திரும்பியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இத்துடன், இந்தப் பரிமாற்றமானது வரும் மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும் தொடரும் என அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, துருக்கியில் கடந்த மே 16 ஆம் தேதியன்று நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இருநாடுகளும் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள தலா 1000 போர்க் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜெர்மனியில் பெண் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 18 பேர் படுகாயம்!