இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத இளம் வீரர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இரண்டு இளம் வீரர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் அணியில் இடம்பெறவில்லை.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இதையும் படிக்க: அதிவேக அரைசதம் விளாசி ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை சமன்செய்த மே.இ.தீவுகள் வீரர்!
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற ஹர்சித் ராணா மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலி இடத்தை நிரப்புவது கடினம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?
அதேபோல, முழு உடல்தகுதி இல்லாத காரணத்தினால் அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமியும் அணியில் இடம்பெறவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விவரம்
ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த்(துணைக் கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.