சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்படுவது அவ்வளவு எளிதல்ல: அஜித் அகர்கர்
சர்வதேச போட்டிகளில் அணியின் கேப்டனாக செயல்படுவது எளிதான விஷயமாக இருக்காது என இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இதையும் படிக்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத இளம் வீரர்கள்!
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
அஜித் அகர்கர் கூறுவதென்ன?
டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச போட்டிகளில் அணியின் கேப்டனாக செயல்படுவது அவ்வளவு எளிதான விஷயமாக இருக்கப் போவதில்லை என அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் கடிமனான அனுபவமாக இருக்கலாம் அல்லது உண்மையில் சிறந்த தொடராக அமையலாம். இந்த தொடர் கடினமாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. அனுபவங்களே இந்திய அணியை முன்னோக்கி நகரச் செய்யும்.
தற்போது, ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அவருக்கு கண்டிப்பாக கடினமாக இருக்கப் போகிறது. சர்வதேசப் போட்டிகளில் அதிக சவால்கள் நிறைந்திருக்கும். இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றத்தை சந்தித்து வருகிறது. மூத்த வீரர்களில் இருவர் தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். அதனால், கேப்டன் பொறுப்பு மிகவும் சவாலானதாக இருக்கப் போகிறது.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலி இடத்தை நிரப்புவது கடினம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?
ஷுப்மன் கில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் மிகச் சிறந்த வீரர். எங்கள் அனைவருக்கும் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. கேப்டனை ஓரிரு மணி நேரங்களில் அவர்களது செயல்பாட்டினை வைத்து தேர்வு செய்துவிட முடியாது. கேப்டனாக நியமிக்கப்பட உள்ளவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கவனித்தே அவர்களுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படுகிறது.
ஷுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதை சரியான முடிவாக கருதுகிறோம். கடந்த ஆண்டில் அவரது விளையாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் நாங்கள் கவனித்தோம். அவரிடம் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்றார்.