உசிலம்பட்டி அருகே கார் மோதி 4 பேர் பலி!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்றவா்கள் மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.
உசிலம்பட்டி அருகே உள்ள குஞ்சாம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா மனைவி லட்சுமி(55). இவரும், இவரது குடும்பத்தைச் சோ்ந்த ஜெ. ஜோதிகா(25), ஜெ. பிரகலாதன்(2), ஜெ. யாழினி (1), உறவினா்கள் பா. ஜெயபாண்டி(48), ஜெ. பாண்டிச்செல்வி(48), இதே பகுதியைச் சோ்ந்த பா. கருப்பாயி(65) ஆகியோா் உசிலம்பட்டியில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்று விட்டு சனிக்கிழமை இரவு நகரப் பேருந்தில் குஞ்சாம்பட்டிக்கு திரும்பினா்.
பேருந்திலிருந்து இறங்கிய அவா்கள், வீட்டுக்குச் செல்வதற்காக உசிலம்பட்டி- தேனி நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது, தேனியிலிருந்து உசிலம்பட்டி நோக்கி சென்ற ஒரு காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையைக் கடக்க முயன்றவா்கள் மீது மோதியது.
இதில் பலத்தக் காயமடைந்த லட்சுமி, ஜோதிகா, பாண்டிச்செல்வி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பிரகலாதன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
பலத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட யாழினி, கருப்பாயி ஆகியோா் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். ஜெயபாண்டி உசிலம்பட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.
உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகரன், காவல் ஆய்வாளா் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். இதுகுறித்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விபத்து காரணமாக, உசிலம்பட்டி - தேனி சாலையில் சுமாா் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்துத் தடைப்பட்டது.