ஏன் நம்மால் ரூ. 1000 கோடி படங்களைக் கொடுக்க முடியவில்லை? மணிரத்னம் பதில்!
இயக்குநர் மணிரத்னம் ரூ. 1000 கோடி வசூல் எதிர்பார்ப்பு குறித்து பேசியுள்ளார்.
ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் தக் லைஃப் திரைப்படத்திற்காக படக்குழுவினர் அடுத்தடுத்து நேர்காணல்களில் பேசி வருகின்றனர்.
படத்தின் இயக்குநர் மணிரத்னம் சில நேர்காணல்களில் பங்குபெற்று தக் லைஃப் திரைப்படத்தையும் தாண்டி பல விஷயங்களைப் பேசி வருகிறார்.
அப்படி, ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட மணிரத்னத்திடம் ஏன் தமிழ் சினிமாவிலிருந்து இன்னும் ரூ. 1000 கோடியை வசூலிக்கும் திரைப்படம் உருவாகவில்லை எனக் கேட்கப்பட்டது.
அதற்கு மணிரத்னம், “நாம் எதற்காக சினிமாவுக்கு வந்தோம்? நல்ல படங்களை எடுக்க வந்தோமோ இல்லை இருப்பதிலேயே அதிக வசூலைக் குவிக்கும் படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காகவா? முன்பெல்லாம் ஒரு படம் நன்றாக இருக்கிறது; ஒருகடத்திற்கு மேல் நன்றாக இல்லையென்றே பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், இப்போது ரூ. 100 கோடி, ரூ. 500 கோடி என வசூலைப் பற்றி யோசிக்கின்றனர்.
எனக்குத் தெரிந்த பல இயக்குநர்கள் நல்ல படங்களைக் கொடுக்க வேண்டுமென நினைக்கின்றனர். அப்படங்கள் அதிகமாக வசூலித்தால் சந்தோஷம். சிலர் வசூலைக் குவிப்பது ஒன்றே நோக்கமாக வைத்திருந்தால் அதுவும் சரிதான். ஆனால், நான் ரூ. 1000 கோடி வசூலிக்க வேண்டும் என்பதற்காக ஒரு படத்தை இயக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சூது கவ்வியதா? விஜய் சேதுபதியின் ஏஸ் - திரை விமர்சனம்!