மண் குவாரி செயல்பாட்டுக்குத் தடை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கல்லங்குடி மண் குவாரியின் செயல்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
இதுதொடா்பாக தேவகோட்டையைச் சோ்ந்த கனகராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தேவகோட்டை கல்லங்குடி கிராமத்தில் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு நேரு என்பவருக்குச் சொந்தமான மண் குவாரி உள்ளது. இந்தக் குவாரியிலிருந்து சிறு கனிம விதிகளுக்குப் புறம்பாக அளவுக்கு அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.
குடியிருப்புப் பகுதியில் உள்ள இந்தக் குவாரியிலிருந்து தினமும் 100-க்கும் அதிகமான லாரிகள் மூலம் கனிமங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதனால், பள்ளி மாணவா்கள், கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது.
மேலும், அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்தும் இந்த மண் குவாரி சட்ட விரோதமாகச் செயல்படுகிறது. எனவே, இந்தக் குவாரிக்குத் தடை விதிக்க வேண்டும். குவாரிக்கு புதிய உரிமம் வழங்கக் கூடாது என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
உரிமக் காலம் முடிவடைந்த நிலையில் குவாரி செயல்படக் கூடாது. எனவே, கல்லங்குடி மண் குவாரியின் செயல்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனுதாரரின் கோரிக்கை குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.