ஆகக்கடவன விமர்சனம்: பிரச்னையில் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள்; புதுமுகங்களின் முயற்சி எப்படி?
மூன்று நண்பர்கள் ஒரு மெடிக்கல் கடையில் ஒன்றாக வேலை செய்து வருகிறார்கள். அந்தக் கடையின் உரிமையாளர் கடையை விற்க முடிவெடுக்க, அதை அவர்களே வாங்கிக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் சேமித்து வைத்த பணம் திருடப்படுகிறது. இந்த நிலையில், ஊருக்குச் சென்று சொத்தை விற்று பணத்தைத் தயார் செய்ய முடிவெடுக்கிறார் அவர்களில் ஒருவரான ஆதித்யா (ஆதிரன் சுரேஷ்). அவருடன் இரு சக்கர வாகனத்தில் துணையாகச் செல்கிறார் விக்கி (சி.ஆர்.ராகுல்). பயணத்தின்போது அவர்களது வண்டி பஞ்சராகிறது. அதைச் சரிசெய்யக் காட்டுக்குள் இருக்கும் ஒரு பஞ்சர் கடைக்குச் செல்கிறார்கள். அங்கே அந்நியர்களுடன் ஏற்படும் பிரச்னையால் ஆபத்தான சூழலில் சிக்கிக்கொள்கிறார்கள். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே 'ஆகக்கடவன' படத்தின் கதை.
சாந்தமான பாவனையையும், என்ன நடக்கிறது என்று புரியாத குழப்பமான மனநிலையையும் கடத்துவதற்கு நடிகர் ஆதிரன் சுரேஷ் கடுமையாக முயற்சி செய்திருக்கிறார். ஆனால், டப்பிங் குரலில் மூச்சு வாங்கினாலும், முகத்தில் அந்தப் பாவனை இல்லாதது பெரிய குறை. எதற்கெடுத்தாலும் கோபப்படும் கதாபாத்திரத்தில் சி.ஆர்.ராகுல் நடிப்பில் தேர்ச்சி பெற முயல்கிறார். மூச்சு விடாமல் கதைகள் பேசும் கதாபாத்திரத்தில் சதீஷ் ராமதாஸ், சுறுசுறுப்பான உடல்மொழியால் கவனத்தை ஈர்க்கிறார். வில்லன்களாக நடித்துள்ள வின்சென்ட். எஸ், மைக்கல். எஸ் ஆகியோர் முறைப்பதைத் தவிர வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்டவில்லை. ஒட்டுமொத்தமாக, நடிகர்கள் இன்னும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கலாம்.
கேமரா கோணங்கள், ஸ்டேஜிங், கலரிங் ஆகியவற்றில் ஒளிப்பதிவாளர் லியோ வி. ராஜா இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். டி.ஐ-யிலும் ஒளிப்பதிவின் தரத்தை இன்னமும் மெருகேற்றியிருக்கலாம். படத்தொகுப்பில் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாமல், சிதறுண்ட உணர்வு தொடர்ந்து நீடிக்கிறது. சுமித் பாண்டியன் - பூமேஷ் தாஸ் கூட்டணி இன்னும் கவனமாகப் பணியாற்றியிருக்கலாம். சந்தான அனேபஜகனின் பின்னணி இசையில் பெரிய குறை இல்லை.

கதை தொடங்கும் முதல் 20 நிமிடங்கள் துண்டு துண்டாக இருப்பதால், குழப்பமும் மெதுவான தொடக்கமும் ஏற்படுகிறது. முக்கிய கதாபாத்திரங்களின் பின்னணி வெறுமனே வாய்ஸ் ஓவரில் விளக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்படாததால், அவர்களின் லட்சியங்கள் தடைப்படுவது நமக்கு எந்தப் பதற்றத்தையும் தரவில்லை. முள்ளுக்காட்டுக்குள் செல்லும் இடத்தில் ஆரம்பிக்கும் பதற்றமான சூழல் சற்றே சுவாரஸ்யத்தை உருவாக்குகிறது. இருப்பினும், ‘பிரபஞ்ச விதி’, 'வார்த்தைகளின் சக்தி' என அடுக்கிக்கொண்டே போகும் தத்துவார்த்த வசனங்கள், பேசி முடிக்கும் தருணத்தில் தொடக்கத்தில் என்ன சொன்னார்கள் என்பதை மறக்கும் அளவுக்கு அயர்ச்சியைத் தருகிறது. அறிமுக இயக்குநர் தர்மா, ஐடியாவாகப் புதுமையான விஷயத்தை எடுத்திருந்தாலும், திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் தடுமாறியிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த `ஆகக்கடவன' புது முயற்சியாகக் கவனம் ஈர்த்தாலும், ஒரு முழுமையான படமாக உருவெடுக்க இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்!