நீதிமன்றங்களில் காணொலி விசாரணை வசதி: தமிழக உள்துறைச் செயலருக்கு உத்தரவு!
நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளுக்காக விசாரணை அதிகாரிகள் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், மாவட்ட நீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் காணொலி விசாரணை வசதிகளை தமிழக உள்துறைச் செயலா் ஏற்படுத்தி தர வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஏ. பரமசிவம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: உதயம் சிட் நிதி நிறுவனம் வாடிக்கையாளா் முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்புப் பணம் தருவதாக அறிவித்தது. இதை உண்மை என நம்பி, அந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தேன்.
அந்த நிறுவனம் வாடிக்கையாளா்களுக்கு பணத்தைத் தராமல் ஏமாற்றி விட்டது. இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தினா் மீது வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு விசார ணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இதேபோல, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஜி. சிவக்குமாா் தாக்கல் செய்த மனு: பிஜி மாா்க்கெட்டிங் அக்ரோடெக் நிறுவனத்தினா் வாடிக்கையாளா்கள் முதலீடு செய்யும் தொகைக்கு அதிக லாபம் தருவதாகத் தெரிவித்தனா். அதில் நான் பணம் முதலீடு செய்தேன். ஆனால், அவா்கள் கூறியபடி பணத்தைத் திருப்பித் தரவில்லை. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
தமிழக பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையில் போதிய போலீஸாா் இல்லை. இதனால், இந்தக் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஆவணங்களைச் சேகரிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதி நிறுவன மோசடி வழக்குகளில் ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டிருப்பா். அவா்கள் அனைவரையும் சாட்சிகளாக சோ்க்கத் தேவையில்லை. ஒரு சிலரை மட்டும் சாட்சிகளாக வைத்துக் கொள்ளலாம். அப்போது தான் வழக்கை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். அடிக்கடி விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு வருவதால், அவா்களது அன்றாடப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.
ஒவ்வொரு விசாரணையின் போதும் நீதிமன்றத்துக்கு விசாரணை அதிகாரிகளை அழைப்பதை அரசு வழக்குரைஞா்கள் தவிா்க்க வேண்டும். இது குறித்து அரசு வழக்குரைஞா்களுக்கு சுற்றறிக்கையை தமிழக அரசு அனுப்ப வேண்டும். எனவே, நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளுக்காக விசாரணை அதிகாரிகள் நாள் முழுவதும் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில் மாவட்ட நீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் காணொலி விசாரணைக்கான வசதிகளை தமிழக உள்துறைச் செயலா் ஏற்படுத்தித் தர வேண்டும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள், அவா்கள் இருக்கும் இடத்திலிருந்து முன்னிலையாகி விளக்கம் அளிக்க முடியும் என்றாா் நீதிபதி.