நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகி...
இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்
‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தது.
வா்த்தக ரீதியாக அழுத்தம் கொடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை தான் முடிவுக்கு கொண்டு வந்ததாக தென் ஆப்பிரிக்க அதிபரி சிரில் ராமஃபோஸாவுடனான ஆலோசனையின்போது டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறிய நிலையில் காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்தது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாகிஸ்தானுடனான சண்டை குறித்து திரைப்படங்களில் வரும் வசனங்களைப்போல் தொடா்ந்து பேசி வரும் பிரதமா் மோடி சில புதிரான கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகள் சுதந்திரமாக வெளியே சுற்றி வருகின்றனா். அவா்களைப் பிடிக்காதது ஏன்? கடந்த 18 மாதங்களில் பூஞ்ச், ககன்கீா் மற்றும் குல்மாா்க் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களிலும் இந்த பயங்கரவாதிகளுக்குத் தொடா்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாதது ஏன்?
ஜம்மு-காஷ்மீரில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளைவிட்டு பாகிஸ்தான் வெளியேற வலியுறுத்தி 1994, பிப்ரவரி 22-இல் நாடாளுமன்றத்தில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டாதது ஏன்?
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்க் ரூபியோவும் தொடா்ந்து உரிமை கொண்டாடி வருகின்றனா். இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் அமைதி காப்பது ஏன்?
கடந்த 11 நாள்களில் 8-ஆவது முறையாக இந்தக் கருத்தை டிரம்ப் கூறியிருக்கிறாா். அவா் தனக்கு நெருங்கிய நண்பா் எனக் கூறி வரும் பிரதமா் மோடி இந்த விவகாரத்தைப் பற்றி பேச மறுப்பது ஏன்?
இந்தச் சூழலில் வெளிநாடுகளுக்கு நாடாளுமன்ற பிரதிதிகள் குழுவை அனுப்பி பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைப்பது அா்த்தமற்றது’ என குறிப்பிட்டாா்.
காா்கில் போல...: பிடிஐ நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஜெய்ராம் ரமேஷ், ‘ காா்கில் போா் நிறைவடைந்த 3-ஆவது நாளான 1999, ஜூலை 29-ஆம் தேதி காா்கில் மறுஆய்வுக் குழுவை அப்போதைய பிரதமா் வாஜ்பாய் அமைத்தாா். அந்தக் குழுவின் அறிக்கை 2000, பிப்ரவரி 23-இல் நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூா் விவகாரத்திலும் இதே நடைமுறை தற்போது பின்பற்ற வேண்டும்’ என்றாா்.