ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது
திருவேற்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதியை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (44). தனியார் ஊழியர். கடந்த 2022} ஆம் ஆண்டு மே மாதம் சரவணனுக்கு திருவேற்காடு கோலடி ரெட்டி தெருவைச் சேர்ந்த புருஷோத்தமன், அவரது மனைவி அனிதா ஆகியோர் அறிமுகமாகினராம். அத்தம்பதி, ஏலச்சீட்டு நடத்தி வருவதாகவும், அதில் சேர்ந்து சீட்டு கட்டி லாபம் அடையலாம் என சரவணனிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர் தலா ரூ.1 லட்சம் என இரு ஏலச்சீட்டுகளுக்கு பணத்தை கட்டியுள்ளார். அதன்பிறகு சீட்டு முடிந்தவுடன் சரவணன் பணத்தைக் கேட்க புருஷோத்தமன் வீட்டுக்குச் சென்றபோது, அங்கு வீடு பூட்டப்பட்டு தம்பதி தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சரவணன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை, ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பிவைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சீட்டு மற்றும் கந்து வட்டி தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் சகாயசெல்வின் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில் புருஷோத்தமன், அவரது மனைவி அனிதா ஆகியோர் சரவணனிடம் மட்டுமல்லாமல், பலரிடம் ரூ.16 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது.
இந்த வழக்குத் தொடர்பாக சென்னை, மாதவரம், அண்ணா தெருவில் தலைமறைவாக இருந்த புருஷோத்தமன் (49), அவரது மனைவி அனிதா (45) ஆகியோரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.