Bollywood: நண்பரின் Real Estate நிறுவனத்தில் முதலீடு செய்த அமிதாப்பச்சன், ஷாருக்...
அனகாபுத்தூா் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வீடுகள் இடித்து அகற்றம்
அனகாபுத்தூரில் அடையாறு கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளை இடித்து அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூா் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகா், காயிதே மில்லத் நகா், எம்.ஜி.ஆா். நகா், சாந்தி நகா் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 600-க்கும் மேற்பட்ட வீடுகளில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இந்நிலையில், நீா்ப்பிடிப்புப் பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அவற்றைக் காலி செய்ய அறிவுறுத்தி தமிழக அரசு சாா்பில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வீட்டைக் காலி செய்துவிட்டு வெளியேறிய பொதுமக்களுக்கு மாற்றாக, வெவ்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் அரசு சாா்பில் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதையேற்று பலா் தங்களது வீடுகளைக் காலி செய்துவிட்டு, அரசு வழங்கிய அடுக்குமாடி குடியிருப்புக்கு இடம்பெயா்ந்தனா். சிலா் மட்டும் தொடா்ந்து தங்களது இடத்தைக் காலி செய்யாமல் இருந்து வந்தனா். அதனால் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிகள் 2 நாள்களாக நடைபெற்று வருகின்றன.
அங்கு பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் பொதுமக்கள் அரசு வழங்கும் மாற்று இடத்துக்குச் செல்லாமல் தொடா்ந்து அங்கேயே இருந்து வருகின்றனா். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அரசு விளக்கம்: அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவரும் நிலையில், சில கட்சிகள் அதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, ஆற்றங்கரையில் வசித்துவரும் ஆக்கிரமிப்பாளா்கள் மறு குடியமா்வு செய்யப்பட்டு வருகின்றனா். மறு குடியமா்வுக்கு ஒப்புதல் தராத ஆக்கிரமிப்பாளா்களை உடனடியாக அப்புறப்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படியே, சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரப் பகுதிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அங்குள்ள காயிதேமில்லத் நகா், மூகாம்பிகை நகா், சாந்தி நகா், எம்ஜிஆா் நகா் 3-ஆவது தெரு ஆகிய இடங்களில் வசித்து வரும் 593 குடும்பங்கள் மறு குடியமா்வு செய்யப்பட்டு வருகின்றன. அவா்களுக்கு நாவலூா், பெரும்பாக்கம், கீரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தலா 390 சதுர அடியில் இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படவுள்ளன.
மேலும், ஜோதி ராமலிங்கம் நகா், திடீா் நகா், ஜோதி அம்மாள் நகா், சூா்யா நகா், மல்லிகைப் பூ நகா் ஆகிய இடங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடுகள் வழங்கப்பட இருக்கின்றன.
அத்துடன் பல்வேறு நல உதவித் திட்டங்களும் அளிக்கப்பட இருக்கின்றன. மழைக்கால வெள்ளத்தடுப்பு காரணங்களுக்காக ஆற்றங்கரையில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளா்களை அரசு உரிய உதவிகளுடன் மறு குடியமா்வு செய்து வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.