KALAM: அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!
பாப்லோ நெரூதா: ஒரு கவிதையாகப் பிறந்த நகரமும்… காதலாக வாழ்ந்த கவிஞனும்… கடல் தாண்டிய சொற்கள் பகுதி 7
அது 1930களில் ஒரு நாள். சிங்கப்பூருக்கே பிரத்யேகமான மங்கலான வெப்பமும் மென்குளிர் பரவும் இளமழையும் தூறும் ஒரு வானிலையில் இந்நகருக்கு வந்திறங்குகிறார் ஒரு கவிஞர்.
ஆழ்மனத்தின் நுண்ணிய உணர்வுகளையும் அதன் சர்ரியல் சித்திரங்களையும் சொற்களில் வரைந்து காட்டியவர், ஊற்றெனப் பெருகும் காதலை அதன் அலை நுரை ததும்பப் பேசியவர், உழைப்பின் உன்னதத்தை, உழைப்பாளிகளின் மகத்தான அர்ப்பணிப்பைத் தன் சொற்களில் செதுக்கிய சிலியின் கவிக்குயில் பாப்லோ நெரூதா.
எதிர்காலத்தில் நோபல் உள்ளிட்ட உயர்ந்த விருதுகள் பலவற்றைப் பெற்று, ‘நெரூதியன் பொயட்ரி’ என்ற வகைமையைத் தந்த பெருங்கவிஞரான அவர்தான் சிலி தேசத்திலிருந்து சிங்கப்பூருக்கு நியமிக்கப்பட்ட முதல் தூதர்.

பருவகாலம் பார்க்காமல் மழையடிக்கும் சிங்கப்பூர்த் தெருவின் கண்ணாடி ஜன்னலில் அக்கவிஞனின் முகம் கவிதைகளால் மலர்கிறது.
‘அலை கடல் கடந்து வந்தேன், நகரம் என்னைக் கைகுலுக்கி வரவேற்றது. வியர்வையின் வாசனைகளும் மூடி மறைத்த வலிகளுமாய்க் கிழக்கு வானம் கனவுகளோடு விடிந்தது.
ஒவ்வொரு மழைத்துளியிலும் கவிதை என் கன்னத்தில் விழுந்து தெறித்தது. நான் மிருகக்காட்சி சாலைக்குச் செல்வதை ஒருபோதும் தவறவிடுவதில்லை. சிங்கப்பூரும் இதற்கு விதிவிலக்கல்ல’ என்று தனது நினைவுக் குறிப்புகளில் எழுதுகிறார்.
மிருகக்காட்சி சாலையில் மாட்டிக்கொண்ட விலங்குகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறை வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சிறைப்பட்ட விலங்கையும் பார்க்கும்போது கண்ணீர் பெருகுகிறது என்று இலை பெருகிய அடர்ந்த வனத்தின் அடியில் நீரூற்றுப் பெருக்கெடுத்து ஊறுவதைப் போல் பாடுகிறார்.
நெருடாவின் எழுத்துகளில் சிங்கப்பூரின் விலங்குகள் ஒரு தனி வாழ்வைப் பெறுகின்றன. ஒரு புலி, ஒரு யானை, ஒரு சிங்கம் — அவை உயிரோடு நடந்து வருவதுபோல் நம்மிடம் தாவிக்கொண்டே இருக்கின்றன.
யானையோடு நடந்து சென்ற பசுமையான நினைவுகள் மனத்தில் பளிச்சிடுகின்றன. மரச் சட்டங்கள் பொருத்தப்பட்ட கருங்கதவுகளுக்கிடையே என் வரிகள் தாவிய பறவைகளாய் உள்ளே செல்கின்றன.
'வெள்ளைப் புலியின் விழிகளில் தீ கொதித்து அடங்குகிறது. அது சிறைப்பட்டிருந்தாலும், அதன் பார்வை சுதந்திரமாக இருக்கிறது. தனது உடலை மறைத்த கம்பிகளைத் தாண்டியும் அதன் குரல் கேட்கிறது’ என்பதாக ஒரு புலியைப் பற்றி எழுதுகிறார்.

என் கீரிப்பிள்ளையான கிரியாவை நான் என்ன செய்யப் போகிறேன்? பாம்புகளுக்கு எதிரான அவளுடைய எதிர்ப்புச்சக்தியை எப்படி நான் பாதுகாக்கப் போகிறேன்.
திமிர்பிடித்த அக்கம் பக்கத்துக் குழந்தைகள் இனி அவளுடன் விளையாட மாட்டார்கள். அவர்கள் அவளைப் புறக்கணிப்பார்கள்; அவள் என்னுடன் பழகியது போல், அவளை மேசையில் அமர்ந்து சாப்பிடவிடமாட்டார்கள்.
அவளை மீண்டும் காட்டுக்கு அனுப்புவதா? அங்கே வேட்டையாடும் மிருகங்கள் விழுங்கிவிடுமே… அவளை எப்படி என்னோடு அழைத்துச் செல்வேன்?
இப்படியொரு விலங்கினை எப்படி நான் கப்பலில் ஏற்றிக் கூடவே அழைத்துச்செல்ல முடியும்? ஒரு கூடையில் வைத்து மறைத்து எடுத்துக்கொண்டு சென்றுவிடலாமா என்ற கேள்விகளுக்கிடையே அவளுடன் ஒரு கூண்டில் பயணம் செய்ய முடிவு செய்தேன், என்கிறார்.
கீரிப்பிள்ளையுடன், நாங்கள் இலங்கைத் தீவை விட்டு, வேறொரு, அறியப்படாத உலகத்திற்கு டச்சுக் கப்பலில் ஏறிச் சென்றோம்.
எனக்கருகில் அவள் உறங்கினாள். என் தனிமை ஒரு பாடலாக விரிந்தது. ஜன்னலின் வழியே சிந்திய மழை என் உள்ளத்தை நிறைத்தது.
கண்களில் காட்டின் முழுமையையும் சுமந்து மழையை நான் காதலிக்கிறேன். இந்த நகரம் என்னோடு பேசவில்லை. ஆனால் நான் அதனைக் காதலிக்கிறேன். கிரியா என் அருகில் உறங்கும் ஒவ்வொரு இரவிலும் நான் அவளைக் காதலித்தேன்.
சிவந்த மண்ணில் பெய்யும் சிறு மழையின் வாசனையில் நான் எழுதியது இந்த நகரின் மையத்திலிருந்து எடுக்கப்பட்ட சொற்கள்.
சிங்கப்பூர் நாடே, நீ வெறும் வணிகமும் வர்த்தகமும் மட்டுமில்லை, நீ ஒரு கவிதை, உன்னை நான் எழுதவில்லை ஏனெனில் நீயே ஒரு கவிதை. இந்தக் கவிஞன் ஒரு காலத்தில் சிங்கப்பூரின் மகனாக வாழ்ந்தவன் என்று எழுதிச் செல்கிறார்.
சிங்கப்பூரில் பாப்லோ நெரூதா இருந்ததைப் பற்றிய நினைவுகளைத் தொகுத்து சிலி-சிங்கப்பூர் உறவுகளின் 40 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் சிலி தூதரகத்தால் நூல் வெளியிடப்பட்டது.
அதில் நெரூதா குறிப்பிட்டுள்ள அனுபவங்கள் குறித்து எழுதவேண்டுமென நினைத்தேன். சிங்கப்பூர் வரும்போதெல்லாம் ராஃபிள்ஸ் ஓட்டலில்தான் தங்கியிருக்கிறார்.
கிட்டத்தட்ட பதினைந்து நாள்கள் அங்குத் தங்கியிருக்கலாமென நம்பப்படுகிறது. அந்தக் காலம் ஒரு கவிஞனின் உள்ளத்தில் பூரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ராஃபிள்ஸ் ஓட்டல் அறையின் பதினொரு அறைகளின் சுவர்களுக்கு இடையில் மட்டுமல்ல. இந்த நகரம் முழுவதும் அவரின் சுவாசம் நிறைந்திருக்கிறது.

சிங்கப்பூரில் இருந்தபோது, அவர் தனது ஹோட்டல் அறையின் வராண்டாவில் ஜின் காக்டெய்ல்களைப் பருகும்போது அடிக்கடி கவிதைகள் எழுதியிருக்கிறார்.
"ஒரு நகரத்தின் வாசனையும் சத்தமும், ஈரப்பதமான வாசனைகளும், தெருவிலிருந்து ஓங்கிய ஒலிகளும் எழுகின்றன. என் அறையின் வெள்ளைச் சுவரில் பல்லிகள் சூரிய ஒளியில் குளிக்கின்றன.
என் குளியலறைத் தொட்டியிலுள்ள தண்ணீர் சூடாக வருகிறது, பூமத்திய ரேகையில் பிறக்கும் கொசுக்கள் என் கணுக்கால்களைக் கடிக்கின்றன.
நான் சன்னலைப் பார்க்கிறேன், பின்னர் வரைபடத்தைப் பார்க்கிறேன். நான் சிங்கப்பூரில் இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நெரூதா, ரங்கூனில் தனது தூதரகப் பணிக்காகச் சென்று கொண்டிருந்தபோது, 1927-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் முதன்முறையாகத் தங்கினார்.
ராஃபிள்ஸ் ஹோட்டல், அதன் வரலாற்றுப் பாரம்பரியம் நிறைந்த சூழலுடன், அவரது தங்கும் இடமாக அமைந்தது. வெப்பமயமான காற்றில் கலந்த கடல் வாசனை, மகிழ்ச்சியாய் வழியும் மழைத்துளிகள்,
வண்ணக் கொக்குகள், சிறுத்தைகளின் கூச்சல்கள், சுறுசுறுப்பான சந்தைகளின் சத்தங்கள் – இவை அனைத்தும் நெரூதாவின் கவிதைகளில் மென்மையாகப் பதிந்துவிட்டன.

அவர் திரும்பியபின் அதன் வாசனையும் இசையும் கனவும் இன்றும் நினைவிலிருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக ராஃபிள்ஸ் ஓட்டலின் ஓர் அறை, அவரது பெயரில் அழைக்கப்படுகிறது.
1996 ஆம் ஆண்டில், ஹோட்டல் அதன் சூட்களில் ஒன்றுக்கு அவரது பெயரைச் சூட்டியது. மேலும் பாப்லோ நெரூதா சூட் இன்றுவரை உள்ளது.
உண்மையில், சிங்கப்பூர் முழுவதும் நெரூதாவின் நினைவுகளின் விலாசம் இருக்கிறது.
பெண் கருஞ்சிறுத்தை
முப்பத்தியோரு ஆண்டுகள் –
நான் அதை மறந்துவிடவில்லை;
சிங்கப்பூரில்:
ஈரப்பதத்தின்
தொழு நோய்த்தன்மையான முத்தங்களினால்
கடிபட்டிருந்த தகிக்கும் வெண்ணிற சுவர்களின் மேல் ரத்த சூடான மழை. நிழல் பொதிகளாய் இருந்த மழை
திடுமென மீண்டும் பளீரிட்டது
மின்னலில் வெளிப்படுத்தியது
பற்களை அல்லது
கண்களை
சூரியனின் இரக்கமற்ற இரும்பு குத்தீட்டி முனைகள்
என் மீது.
வெற்றிலை மற்றும் செந்நிறப் பாக்குகள்
அமிழ்ந்து கொண்டிருந்த
சந்து வழிகளில் நான் திரிந்து கொண்டிருந்தேன்.
அவை இனிய வாசனைமிகு இலை படுக்கையின் மீதிருந்தன.
தன் கசகசக்கும் மதிய உறக்கத்திலிருந்து
அழுகிய துரியன் பழம்.
நான் திடீரென அதைப் பார்த்தேன்:
என் முகத்தினருகே
கூண்டில் ஒரு முகம்.
சாலையின் நடுவில் குளிர் உறைவில்
இரு வட்டங்கள்
இரு காந்தங்கள்
மின் எதிர்கள்
இரு கண் விழிகள்
அவை என் விழிகளுக்குள்
துளைத்துச் சென்றன.
மேலும் ஆணியடித்து நிறுத்தின.
தரை மேல் மற்றும் ரோகத்தனமான இருப்பு வைப்புகளில்
பார்த்தேன்:
வெல்வெட் மயமான நிறத்தில்
பூரணம் தன் உடலை விரித்தது.
இருளை முழுப்பக்குவம் செய்தது போல
மேலும் அந்தத் தோலின் இரவில்
மகரந்தத் துகள்களின் வீழ்ச்சி போல்
தற்காலிக மினுங்கல்கள் தொடங்கின.
ரத்தினக் கல்லின் ஒரு சாய் சதுரம்
அல்லது பொன்னாலான அறுகோணம்
வேறு எப்படி நான் பெயரிடுவது?
மின்னிடும் ஒளி ஊடுருவல் ஒரு சாய்மான இருப்பானது
தன் இடம் மாறியது போல;
ஒரு பெண் கருஞ்சிறுத்தை துடித்தபடி
மேலும் தன் எண்ணங்களை நினைத்தபடி
காட்டுமிராண்டித்தனமான ஒரு ராணி
ஒரு கூண்டில்
பாதையின் நடுவில்
தெருவில்
குப்பையின் மீது.
(கவிதை மொழிபெயர்ப்பு: ‘’கேள்விகளின் புத்தகம்’ – பிரம்மராஜன்)

பாப்லோ நெரூதா சிங்கப்பூரில் இருந்த போது நகரத்தைப் பற்றி எழுதிய கவிதை இது. நெரூதாவின் வாழ்க்கையில் பல நகரங்கள் வந்திருக்கின்றன அதில் சிங்கப்பூர் வேறுபட்டது.
சிங்கப்பூரின் மழை, நகரத்தின் சத்தங்கள் சைனாடவுன் பகுதி சந்தைகளில் முழங்கிய குரல்கள், காபி கடைகளில் சீனக் கிழவிகளின் கீச்சுக்குரல்கள், மீசை முறுக்கிய மொழியின் இசை, தாய்லாந்து வாசனை, உணவு மையங்களில் வாடிக்கையாளர்களின் நெகிழ்ச்சியான உரையாடல்கள் – இவை அனைத்தும், நெரூதாவிற்கு ஒரு கவிதையாய் உணரவைத்திருக்கின்றன.
சில நேரங்களில், ஒரு நகரம் ஒரு மனிதனை மாற்றிவிடும். சில நேரங்களில், ஒரு கவிஞன் ஒரு நகரத்தை நிழலாக வென்று விடுவான். நெரூதாவும் சிங்கப்பூரும் அதுபோல. ஒரு கவிதையாகப் பிறந்த நகரம். ஒரு நகரமாக வாழ்ந்த கவிதை.
காதல் நிழல் அல்ல அது ஓர் ஒளி. நெரூதா- ஒரு கவிஞர், ஆனால் அதைவிடக் காதலுணர்வு மிக்கவர். ஒருவரால் நேசிக்கப்பட்டால் மட்டுமே நேசிக்கத் தயாராக இருக்கிறது காதல்.
பிரிவே காதலின் திருவிழா;
ஏனெனில் அது,
மீண்டும் காதலிக்கும்
சுதந்திரத்தைக் கொடுக்கிறது.
-----
நீ என்னை மறந்துவிட்டால்,
நான் உன்னையும் மறந்துவிடுவேன்,”
----
ஒவ்வொரு நாளும் ஒரு மலர்
உன் இதழில் விரியும்போது
உன்னைத் தேடுகிறேன்
ஓ, என் காதலி… என் உயிர்,
உன் நினைவில் ஒளிரும் அந்த நெருப்பு,
என் உள்ளத்தில் அணையாமல் தீண்டும்
அழியாத நெருப்பு அது,
மறக்கவே முடியாத மாயமது,
உன் காதலால் என் காதல் உயிர் பெறுகிறது.
நீ உயிர்ப்புடன் இருப்பதைப் போல்,
உன் கைகளில் இருக்கும்
அது உன்னைவிட்டு ஒருபோதும் விலகாது.
அவரது எழுத்துகளில் காதல், வெறும் காதல் அல்ல; அது ஓர் உயிருடன் துடிக்கும் அற்புதம். காதலுக்கு மட்டுமே புரியும் ஒரு மெளன மொழி போலவும், எதையாவது நம் உள்ளத்தில் நழுவவைக்கும் மழைத்துளி போலவும் நம்மைத் தொடுகிறது.
ஒருவரின் மூச்சிலிருந்து இன்னொருவரின் இதயம் வரை. அவரது வார்த்தைகளில் காதலில் விடுதலை உண்டு. பிரிவும் ஒரு பரிசாகவே தோன்றுகிறது.
இருவருக்குள்ளும் இருந்த பாசமும் பரிவும் அழிவதற்குப் பதிலாக, காதலை மீண்டும் உணரச் செய்யும் ஓர் இடைவெளியாக மாறுகிறது.
புன்னகையில் மறைந்திருக்கும் ஏக்கத்தை, ஒரு தடவலில் பிறக்கும் நம்பிக்கையை, வார்த்தைகளால் உயிர்ப்பித்துவிடுகிறார்.
நாம் அணியும் உடைகளைப் போல அசுத்தமான கவிதை, சூப் கறைபடிந்து கனவுகளையும் அவதானிப்புகளையும்கூட முன்கூறல்களாகத் தனது படைப்புக்காலம் முழுவதையும் கவிதைக்காகச் செலவிட்டவர் நெரூதா.

பத்தொன்பது வயதில் எழுத வந்தவரின் தீவிர ஆசை காதல் பக்கம் திரும்பாமல் இருந்திருந்தால்தான் ஆச்சர்யம். ‘இன்றிரவு நான் மிகக் கடுமையான வரிகளை எழுதக்கூடும்’ என்பது இழந்த காதலை மனத்திற்குள் இருத்தும் தியானம் போன்ற கவிதை.
நூறு காதல் சானட்டுகள் அவரது மனைவி மத்தில்தே உர்ருடியாவிற்காக எழுதப்பட்டது.
"நான் உன்னை நேசிக்கிறேன், எப்படி, எப்போது, எங்கிருந்து என்பதறியாமல்..." என்ற வரிகள் உலகின் மிக அதிகமாக மேற்கோளிடப்பட்ட காதல் கவிதைகளில் ஒன்றாகும். அதனாலேயே காதல் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.
பாப்லோ நெரூதாவின் காதல் கவிதைகள் வெறும் வரிகளாக இல்லை. அவை இருளுக்கு நடுவே நெய்தல் மலராக விரியும் உணர்வுகள். ஒவ்வொரு கவிதையிலும் காதல் தனது பல்வேறு வடிவங்களை எடுத்துக் கொள்கிறது. கவிதைக் குரல்களில் வலியும் இன்பமும், காத்திருப்பில் நம்பிக்கையும், மரியாதையும் கலந்து தன்னை முழுக் கலைஞன் என ஒவ்வொன்றிலும் நிரூபித்துக்கொண்டே வந்திருக்கிறார். என் கலையைப் பதப்படுத்த நான் என் நகங்களை நறுக்கியுள்ளேன் அதன் அடிச்சதைவரை என்ற வரிகள் நகங்களைக் கடித்தே பழகிய என் கை விரல்களும் இதையே சொல்லக்கூடும்.
நெரூதா எழுதிய ஒவ்வொரு வரியும் சுவாசமாக என்னுள் நுழைந்தது. அவர் காதலைப் பற்றிப் பேசும் போது, அது வெறும் காதலாக அல்ல. வாழ்வின் அடிப்படை உணர்வாக, முடிந்தவரை அழித்து விட்டு மீண்டும் உருவாக்கும் சக்தியாக, ஒரே நேரத்தில் வீழ்ச்சியும், விழிப்புமாக உருபெற்றது. நீ என்னை மறந்துவிட்டால் - கவிதை என்றோ மறந்துபோன காதலனின் உள்ளத்துக்குள் நேராகப் பயணிக்கச் செய்துவிட்டது. யதேச்சையாகச் சொல்லிச் சென்ற வரிகள் நினைவுகளை ஒன்றின் மேல் இன்னொன்றாக அடுக்கிவைத்து மலர்ந்து மறந்த நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்துவிட்டது. காதல் ஒரு புலம்பல் அல்ல; அது ஓர் அழுகுரல் அல்ல. அது ஆசைகளின் விழி நிலை. சுய மரியாதையின் உறுதி, காதலில் தாழ்ந்தும், தன்னிலையே உயர்ந்தும் நிற்கும் உயிர்களின் குரல்கள்.

அவர் காதலை இயற்கையின் அற்புதங்களோடு இணைத்து சொல்வதைப் பார்க்கும் போது, நீரின் ஓட்டத்தைப் போல் ஊடறுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. நெரூதா – காதலால் தீண்டப்பட்ட கவிஞன். அவர் வாழ்ந்த வாழ்வியலே ஒரு கவிதை. அவருடைய வரிகள் இளமையின் ஓட்டங்களோடு பல்வேறு நினைவுகளைத் தட்டியெழுப்புகிறது.
உறவுகளில் நாமும் வாழ்ந்த அந்த மெளனங்களை, அழுத நாட்களை, காத்திருப்பு நிமிடங்களை, திடீரெனப் பறந்து அயலகத்திற்கு வந்த நிமிடங்களை, உறைந்த புன்னகைகளை, உருகிய விசாரணைகளை ஒட்டுமொத்த அத்தனையும் நெரூதாவின் கவிதைகளின் வழியாக உயிர்பெற்றுவிட்டது. நாம் எல்லோருமே ஏதாவதொரு தருணத்தில் காதலித்திருப்போம், அதில் திளைத்தவர்களுக்கு நெரூதாவின் காதல் கவிதைகள் காதலின் அழகை மட்டுமல்ல, அதன் வீழ்ச்சியையும் பாராட்டக்கூடிய சிந்தனைகள் எனப் புரியும். காதலின் ஒவ்வொரு முனையிலும் பெருக்கலும் சுருக்கலும் விரித்தலுமாகக் கவிதையாகவே காதலும் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை எனது நெஞ்சில் விதைத்திருக்கிறார் நெரூதா.

நெரூதா இறப்பதற்கு முன்பாக Animal of Light என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
இன்று -
தான் இழந்த அந்தக்
காட்டின் ஆழத்தில்
௮வன்-
எதிரிகளின்
காலடிச் சத்தத்தைக் கேட்கிறான் .
அவன் -
மற்றவர்களிடமிருந்து
ஓடவில்லை.
தன்னிடமிருந்து,
ஓயாத தன் பேச்சிலிருந்து
எப்போதும்-
தன்னைச் சூழ்ந்திருந்த
பாடற் குழுவிலிருந்து
வாழ்க்கையின்
உண்மையிலிருந்து
ஓடுகிறான் .
ஏனென்றால்
இம்முறை
இந்த ஒரேமுறை
ஓர் அசை
அல்லது
ஒர் மெளனத்தின் இடைவேளை
அல்லது
கட்டவிழ்க்கப்பட்ட அலையோசை
என் முகத்துக்கு நேராக
உண்மையை
வீசிவிட்டுச் செல்கிறது.
இனிமேல்
ஒன்றும் சொல்வதற்கில்லை
அவ்வளவு தான்!
காட்டின் கதவுகள்
மூடிக் கொண்டன.
இலைகளைத் தளிர்க்கச்செய்து
கதிரவன்
வட்டமிட்டுச் செல்கிறான்
நிலவு
வெண்கனியாகக்
காட்சியளிக்கிறது
மனிதன்
தவிர்க்க முடியாத
முடிவிற்குத் தலை வணங்குகிறான்.
மொழிபெயர்ப்பு : கவிஞர் முருகுசுந்தரம்
- சொற்கள் மிதக்கும்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs