உள்ளாட்சிப் பதவி காலியிடங்களுக்கான தோ்தல்: இடஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய உத்தர...
”பெற்றோர் இல்லாத பிள்ளைக படிப்பு பாதியில் நின்னுடக்கூடாது”- வழிகாட்டும் தஞ்சை கலெக்டர்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், பெற்றோர் இல்லாத குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் படி வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடந்த சில தினங்களாக கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அனைத்து தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பெற்றோர் இல்லாத பள்ளிக் குழந்தைகள் குறித்துக் கணக்கெடுப்பு நடத்தினார்.
இதில், அம்மா, அப்பா இருவரும் இல்லாத மாணவ, மாணவியர் 594, அம்மா மட்டும் இல்லாதவர்கள் 2,417, அப்பா மட்டும் இல்லாதவர்கள் 9,342 என மொத்தம் சுமார் 12,353 மாணவ, மாணவியர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் இந்த மாணவ, மாணவியர்களின் படிப்பு பொருளாதாரம் உள்ளிட்ட எதனாலும் பாதித்து இடை நிற்றல் இல்லாமல் தொடர்ந்து படிப்பதற்கான உதவியைச் செய்துகொடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் இந்த பெரும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.
இது குறித்து வருவாய் துறை வட்டாரத்தில் பேசினோம், சிறந்த கல்வியைக் கற்கும் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்வார்கள். அப்பா, அப்பா இருவரது கவனிப்பில் உள்ள மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்தி கரை சேர முறையான வழிக்காட்டுதல் கிடைக்கும். அதே நேரத்தில் அப்பா, அம்மா மற்றும் இருவரும் இல்லாத பிள்ளைகளுக்கு இது சாத்தியமா என்றால் கேள்விக்குறிதான்.

அதுவும் வறுமை கோரப்பிடியில் இருக்கும் பிள்ளைகள் இடை நிற்றல் இல்லாது முழுமையாகப் படித்து முடிப்பதற்குப் பல வலிகளைக் கடக்க வேண்டியிருக்கும். பள்ளிக்குச் செல்வதைப் பாதியில் நிறுத்திய மாணவர்களின் இடை நிற்றல் குறித்து விசாரித்தால் வறுமைதான் அதற்கான காரணமாக இருக்கும். அத்துடன் அம்மா, அப்பா இல்லாத பிள்ளைகள் வாழ்வதற்கு வழியில்லாத சூழலுக்காக படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்றுவிடுவார்கள். ஒரு மாணவனுக்கு முழுமையான கல்வியறிவு கிடைத்துவிட்டால் போதும். அவன் எப்படியாவது வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்துவிடுவான்.
ஆனால் பெற்றோர் இல்லாத குழந்தைகளும் எக்காரணத்தைக் கொண்டும் கல்வியில் இடையில் நின்று விடக்கூடாது என்பதற்காக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பெரும் முன்னெடுப்பை எடுத்துவருகிறார். அரசுப் பள்ளி ஒன்றில் நிகழ்ச்சிக்கு சென்ற ஆட்சியருக்கு, அந்த ஒரே பள்ளியில் மட்டும் பெற்றோர் இல்லாமல் மூன்று மாணவர்கள் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் படிப்பிலும் சுமாராக இருந்துள்ளனர். அப்போது எழுந்த எண்ணம்தான் இந்த அரவணைப்பு. அரசுப்பள்ளிகளில் 1ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய பெற்றோர் இல்லாத மாணவர்கள் குறித்துக் கணக்கெடுக்க உத்தரவிட்டார். இவர்களின் தேவை அறிந்து படிப்புக்கான உதவி செய்வதுடன் அந்தக் குடும்பத்துக்கு அரசு சார்பில் கிடைக்க கூடியவற்றை செய்து தருவதற்கான ஏற்பாட்டையும் செய்கிறார்.

பணம் உள்ளிட்ட எந்தக் காரணத்தினாலும் இவர்களுடைய படிப்பு பாதியில் நின்றுவிடக்கூடாது என்பதற்காக வழிக்காட்டி, முயற்சியை மேற்கொண்டு வருகிறார். பெற்றோர் அன்பு கிடைக்காமல் மாணவர்கள் வழி தவறிச் செல்லாமல் இருக்க அவர்களை வருவாய் துறையினர் நேரடி கண்காணிப்பில் இருக்கவும் ஒரு மாணவன் படிக்க வசதியின்றி அல்லது ஏதோ ஒரு காரணத்தால் இனி படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது என்பதற்காகவே தன்னுடைய நேரடிக் கண்காணிப்பில் இதைச் செயல்படுத்திவருகிறார்.
மாணவர்களின் தேவைகள் அறிந்து அதற்கேற்றார் போல் உதவி செய்வதற்காக சொந்த பங்களிப்புடன், சரியான ஸ்பான்சர்ஸ் மூலம் படிப்பிற்கான ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். இதுவரை எடுத்துள்ள கணக்குப்படி பெற்றோர் இல்லாமல் 12,353 பிள்ளைகள் உள்ளனர். பெற்றோரை இழந்த சீவன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன், சில்லத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி இவர்களது வாழ்க்கை துயரம் நம்மை நெஞ்சை ரணமாக்கக் கூடியது. இவர்களைப் போலவே பல பிள்ளைகள் துயரத்தின் பிடியில் உள்ளனர். அந்தக் குழந்தைகளுக்கு உறுதுணைய இருந்து நிறைவான கல்வி கிடைப்பதற்கு வழி வகை செய்துள்ளார்.

பொதுவாக பெண்கள் திருமணம் ஆனதும் தங்கள் பெயருக்கு பின்னால் கணவர் பெயரை சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் கலெக்டர் பிரியங்கா தன் தாயின் பெயரான பங்கஜத்தை சேர்த்து பிரியங்கா பங்கஜம் என தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் ``அம்மா, தன்னோட நகை, நட்டை அடகு வச்சு என்னை படிக்க வச்சு ஆளாக்கினாங்க. இப்ப, நான் உங்க முன்னால கலெக்டராக நிற்கிறேன்னா அதுக்குக் காரணம் அம்மா. அதுக்கு நன்றிக்கடன் செலுத்ததான் அம்மா பெயரை என் பெயருக்கு பின்னால் சேர்த்திருக்கேன்" என நெகிழ்ச்சியாகக் கூறினார்.
படிப்புக்கான உதவி என்றால் முதல் ஆளாக உதவிக்கு முன் நிற்பார். பெற்றோர் இருவரும் இல்லாத மாணவன் ஒருவன் 12ம் வகுப்பில் 532 மார்க் எடுத்திருந்தான். மேற்கொண்டு படிக்க வழியில்லாத அவனது நிலை அறிந்த ஒருத்தர், விவரத்தை கலெக்டருக்கு வாட்ஸ் அப்பில் தெரிவிதிருந்தார். உடனே தாசில்தாரை அனுப்பி விசாரிக்க வைத்துடன் வக்கீலுக்குப் படிக்க ஆசைப்பட்ட அவன் கனவையும் நிறைவேற்றித் தந்திருக்கிறார்.

பெற்றோர் இல்லாத பிள்ளைகள் படிப்பைக் கைவிட்டு விடக்கூடாது என்பதற்காக கணக்கெடுப்பு மட்டும் நடத்தாமல் அவர்கள் படிப்பை நிறைவு செய்வதற்கான, வழி காட்டுகிற ஏற்பாட்டையும் திட்டமிடலோடு செய்திருக்கிறார். பெற்றோரை இழந்து தவிக்கிற குழந்தைகளை இறுகப்பற்றிக் கரை சேர்க்கும் அவரின் மனதைப் பலரும் பாராட்டுகின்றனர்.