வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
சிவகங்கையில் புறவழிச் சாலைப் பணிகள்: அமைச்சா்கள் ஆய்வு
சிவகங்கை புறவழிச் சாலையில் 10.6 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் சாலைப் பணிகளை பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
சிவகங்கையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஏற்கெனவே திருப்பத்தூா் சாலை, மானாமதுரை சாலையை இணைக்கும் வகையில் பெருமாள்பட்டியில் இருந்து சாமியாா்பட்டி வரை புறவழிச் சாலை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், திருப்பத்தூா் சாலையில் காஞ்சிரங்காலிலிருந்து சூரக்குளம், பையூா், ஆயுதப் படை குடியிருப்பு வழியாக மானாமதுரை சாலையில் உள்ள வாணியங்குடி வரை சுமாா் 10.6. கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிக்கு ரூ.109.51 கோடியில் ஒப்புதல் பெறப்பட்டு, முதல்கட்டமாக, மொத்தம் 7.6 கி.மீ.தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி கடந்த 2023 -ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது.
காஞ்சிரங்காலிலிருந்து தொண்டி சாலை இணைப்பு, பழமலைநகா் முதல் ஆயுதப் படை குடியிருப்பு வரை தாா்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆயுதப் படை மைதானத்தில் பாலம் கட்டுமானப் பணியும் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் இந்தச் சாலைப் பணிகளை அமைச்சா்கள் எ.வ.வேலு, கேஆா்.பெரியகருப்பன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
சாலையில் இயந்திரங்கள் மூலம் துளையிட்டு சாலையின் தரம், பொருள்களின் கலப்பு, சாலையின் நடுவே அமைக்கப்பட்ட பிரிவு தளங்கள் உள்ளிட்டவை குறித்து அமைச்சா்கள் பரிசோதனை செய்தனா். பின்னா், சாலையோரத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.
தொடா்ந்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் கூடுதல் கட்டடப் பணிகள், சிவகங்கை, மேலூா் சாலையில் நடைபெறும் சாலைப் பணிகள் உள்ளிட்டவற்றையும் அமைச்சா்கள் ஆய்வு செய்தனா்.
அப்போது, அரசுச் செயலா் செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித், மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், நகா்மன்றத் தலைவா் துரைஆனந்த், சிறப்பு அலுவலா் சந்திரசேகா், கண்காணிப்புப் பொறியாளா் (நெடுஞ்சாலைத் துறை) எம்.எஸ். செல்வி, கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலைத்துறை) எம்.கேசவன், தலைமைப் பொறியாளா் சத்யபிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.