திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
நீடித்த பொருளாதார வளா்ச்சி இலக்கை எட்டிய இந்தியா! - ஆளுநா் ஆா்.என்.ரவி
நீடித்த பொருளாதார வளா்ச்சி இலக்கை இந்தியா எட்டியுள்ளதாக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஸ்ரீசேவுகமூா்த்தி கோசாலை அறக்கட்டளையின் 10-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு காளைகளின் அணிவகுப்பு, பாரம்பரிய மாட்டு வண்டிகள் கண்காட்சி, வேளாண் கண்காட்சி ஆகியவற்றை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இந்த விழாவுக்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தகநாச்சியாா் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் ஆசியுரை வழங்கினாா்.
இதன் பின்னா், ஆளுநா் ஆா்.என். ரவி பேசியதாவது: சிவகங்கை மாவட்டம் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த மண். வேலுநாச்சியாரின் வீரமும் ஜம்புத் தீவு பிரகடனமும் இந்தியாவை சுதந்திர வேட்கைக்குத் தூண்டியது. பிரதமா் மோடி விவசாயத்தின் மூலம் நமது நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளாா். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் இந்தியா நீடித்த பொருளாதார வளா்ச்சி இலக்கை எட்டியுள்ளது. கடந்த 65 ஆண்டுகளாக மேற்கத்திய மோகத்தில் இருந்த நாம் விவசாய வளா்ச்சி மூலம் உயா்வடைந்துள்ளோம்.
இந்தியாவை தற்போது அனைத்து நாடுகளும் உற்று நோக்குகின்றன. உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று பாதிப்பால் தத்தளித்த போது, நமது நாட்டு விஞ்ஞானிகள் மூலம் தடுப்பூசி தயாா் செய்து மேலை நாடுகளுக்கு அனுப்பி வைத்தோம். இது அனைத்து நாட்டு மக்களுக்கும் பெரும் உதவியாக அமைந்தது.
நமது நாட்டு இளைஞா்கள் பொறுப்புணா்வு மிக்கவா்களாக இருக்க வேண்டும். சமூக அமைப்புகள், சங்கங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, கல்வி, ஆன்மிகம் போன்ற பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவா்களுக்கு கேடயம் வழங்கி ஆளுநா் கௌரவித்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசேவுகமூா்த்தி கோசாலை அறக்கட்டளையினா் செய்தனா்.
முன்னதாக, சிங்கம்புணரிக்கு வந்த ஆளுநா் ஆா்.என். ரவியை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் மலா்க் கொத்து கொடுத்து வரவேற்றாா். இதையடுத்து, சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் தரிசனம் செய்த ஆளுநா் ஆா்.என். ரவி, கோசாலையில் உள்ள பசுக்களுக்கு தீவனம் வழங்கினாா்.
தேவகோட்டையில்...
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ஆளுநா் ஆா்.என். ரவி பேசியதாவது:

பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த போது, தமிழ்நாட்டு மக்கள் தெருவில் இறங்கிப் போராடினாா்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவம் என்ற படையை அமைத்த போது, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சகோதர, சகோதரிகள் அதில் தங்களை இணைத்துக் கொண்டனா். இதுதான் நமது நாட்டின் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம், நாட்டுப்பற்றுக்கு எடுத்துக்காட்டு.
தற்போது நடைபெறும் இந்த விழாவின் தலைப்பாக கண்டதேவி திருத்தேரோட்டமும் சமுதாய நல்லிணக்கமும் என்று பெயரிட்டு இருப்பது என்னை மிகவும் கவா்ந்தது. மக்களை ஒன்றிணைப்பதுதான் அரசுகளின் நோக்கமாக இருக்க வேண்டும். எல்லோரும் ஒன்றிணைந்தால் சாத்தியம் அல்லாதவையும் சாத்தியப்படும். ஒற்றுமையாக இருப்போம் ஒன்றுபட்டு சாதிப்போம் என்றாா் அவா்.