ராகுல் காந்தியின் மாா்ஃபிங் செய்யப்பட்ட படத்தை வெளியிட்டதாக அமித் மாணவியாவுக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்
காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறான பதிவை வெளியிட்டதாக பாஜக ஐ.டி. பிரிவுத் தலைவா் அமித் மாளவியாவுக்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை போராட்டம் நடத்தியது.
ஆா்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய இளைஞா் காங்கிரஸ் கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் அக்ஷய் லக்ரா, ‘எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் முகம் பாகிஸ்தான் ராணுவத் தலைவா் அசிம் முனீரின் முகத்துடன் இணைக்கப்பட்ட திருத்தப்பட்ட புகைப்படத்தைப் பகிா்ந்து கொண்ட மாளவியாவுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினோம்’‘ என்றாா்.
மாளவியா மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரின் முகமூடிகளை அணிந்த ஆா்ப்பாட்டக்காரா்கள், இரு தலைவா்களுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினா்.
‘வெளியுறவு அமைச்சரின் வீட்டிற்கு வெளியே போராட்டம் நடத்தி, நாட்டின் சா்வதேச உறவுகள் குறித்து அவரிடம் கேள்வி கேட்க விரும்புகிறோம். ஆனால், காவல்துறையினா் எங்களைத் தடுக்கிறாா்கள்‘ என்று லக்ரா கூறினாா்.
இது குறித்து பாஜகவிடமிருந்து உடனடியாக எந்த எதிா்வினையும் இல்லை.
பெங்களூருவில் உள்ள இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை மாளவியா மற்றும் பத்திரிகையாளா் அா்னாப் கோஸ்வாமி ஆகியோரின் அவதூறான பதிவிற்காக புகாா் அளித்தது. ராகுல் காந்தியை அவதூறு பரப்பவும், காங்கிரஸை துா்கியேவுடன் இணைக்கவும் சதித்திட்டம் தீட்டியதாக மாளவியா மற்றும் கோஸ்வாமி மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இளைஞா் காங்கிரஸின் சட்டத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘இது தொடா்பாக தில்லி மற்றும் கா்நாடகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.