'விமர்சனங்களைத் தாண்டித்தான் தி.மு.க 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது!" - சொல்கிறார் கே.என்.நேரு
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களுக்கு அமைச்சர்கள் தேர்தல் பணிகளை விளக்கினர். இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு,
"தி.மு.க-வில் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க கட்சி தோழர்கள் உற்சாகமாக, சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஏழாவது முறையாக தி.மு.க தான் ஆட்சி அமைக்கும். மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார். நிர்வாகிகளிடம் பேசும் போது அரசு சார்பில் என்னென்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கின்றனர். அதையும் நான் குறித்து வைத்துள்ளேன். அரசு சார்பாக செய்ய வேண்டிய பணிகளை செய்து முடிப்போம். எதிர்க்கட்சிகள் ஆரம்பத்திலிருந்து தி.மு.க-வையும், தி.மு.க தலைவரையும் விமர்சனம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதனை தாண்டி தான் பத்து தேர்தல்களிலும் தி.மு.க வெற்றி அடைந்துள்ளது.

அதேபோல், இந்த தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெறும். பொதுமக்கள் முழுமையாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு தான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். எந்த காலத்திலும் இதுபோல் தி.மு.க தோழர்கள் உற்சாகமாக இருந்து பார்த்ததில்லை. தற்போது, அவர்கள் உற்சாகமாக இருந்து, எங்களுக்கும் உற்சாகமூட்டி இருக்கின்றனர். என்னிடம் 41 தொகுதி பொறுப்பு கொடுத்துள்ளனர். அதில், இரண்டு மூன்று தொகுதிகளை தவிர மற்ற அனைத்து தொகுதிகளும் தி.மு.க-வுக்கு சாதகமாகத்தான் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி தி.மு.க-வுக்கு வேண்டும் என்று அனைவரும் கேட்டுள்ளனர். அதனை முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.க தலைவர் தான். நான் முடிவு செய்ய முடியாது.
எத்தனை முனை போட்டி என்று எனக்குத் தெரியவில்லை" என்றார்.