தமிழக-ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை; ரூ. 1.43 லட்சம் பறிமுதல்
தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோயில் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், காளிக்கோயில் கிராமத்தில் ஆந்திர மாநில எல்லையில் கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்குள் வரும் வாகன ஓட்டுநா்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகாா் வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) நாகராஜன் தலைமையிலான போலீஸாா் காளிக்கோயில் சோதனைச்சாவடியில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, கணக்கில் வராத ரூ. 1.43 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சோதனை சாவடியில் பணியில் இருந்த மோட்டாா் வாகன ஆய்வாளா் சையத் ஜவ்வாது அஹமத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.